சமீபத்தில் உலக தடகளத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் டோக்கியோ ஒலிப்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்த டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் கனடா தடகள வீரர் ஆண்டர்சன் வெற்றி பெற்றதையடுத்து முதல் இடத்தை இழந்தார்.
இந்த இடத்தை நீரஜ் சோப்ரா தற்போது கைப்பற்றியுள்ளார். 1445 புள்ளிகளைப் பெற்று நீரஜ் சோப்ரா முதல் இடத்தையும் பாகிஸ்தானிய வீரர் அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்டர்சன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முதன்முதலில் நீரஜ் சோப்ரா 2016ஆம் ஆண்டு 86.48 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து உலக சாதனை படைத்தார்.தொடர்ந்து 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும்,2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மிக இளைய இந்திய வீரர் ஆகிய பெருமைகளைப் பெற்ற நீரஜ் சோப்ரா தற்போது உலக அளவில் ஈட்டியெறிதலில் நம்பர் 1 வீரர் என்ற சாதனையைப் படைத்து உலக நாடுகளிடையே இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.