ஜிம்பாப்வேயில் இருந்து உலகத்தர வீரர்கள்
Zimbabwe secures six-wicket victory against Sri Lanka in T20 World Cup 2026 : 1998 ஷார்ஜா கோப்பையில் சச்சினை அவுட் செய்தபோது ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் ஹென்ரி ஒலங்கா ஆர்ப்பரித்தும் சச்சினுக்கு ஷார்ட் பால் ஆடத் தெரியாது எனப் பேசிவிட இரவு தூங்காமல் தவித்த சச்சின் அடுத்த போட்டியில் ஒலங்காவை பதிலடி கொடுத்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்வாறாக இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு சவால்விடும் அணியாக விளங்கிய ஜிம்பாப்வேயில் அலிஸ்டர் கேம்ப்பெல், ஆன்டி பிளவர், கிராண்ட் பிளவர் சகோதரர்கள், டேவ் ஹவ்டன், நீல் ஜான்சன், பால் ஸ்ட்ரேங் போன்ற உலகத் தரமான வீரர்கள் 90களில் இடம்பெற்றிருந்தனர்.
ஜிம்பாப்வே அணியில் அதிர்ச்சி
ஆனால் அவர்களுக்குப் பின் ஜிம்பாப்வே அணி கட்டெறும்பாகத் தேய்ந்து போயிற்று எனக் கூட கூறலாம். கடந்த 2024 டி20 உலகக் கோப்பை போட்டிக்குக் கூட ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை. அதனால் இம்முறை தகுதிப் போட்டிக்கு ஆடத் தள்ளப்பட்டு, போராடி, டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம்பெற்றது. இந்தத் தொடரில் கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறது. ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அந்த அணிக்கு மட்டுமின்றி மற்ற அணிகளுக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
ஜஸ்டின் சம்மன்ஸ் பதில்
இது போதாதென புத்துணர்வு பெற்று, விளையாடி வரும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 178 ரன்களை 3 பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்து மற்றோர் அதிர்ச்சியை அளித்துள்ளது. அத்துடன் குரூப் பி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. பத்தோடு பதினொன்றாக கருதப்பட்ட ஜிம்பாப்வே அணிக்கு அனைவரையும் வாய்பிளக்க வைத்ததற்கு காரணமே ஜிம்பாப்வே அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் தான் முக்கிய காரணம். இதுகுறித்து பேசிய அவர் "இது ஏதோ தற்செயலாக நடந்ததல்ல, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை அடைந்ததில் திருப்தி அடைகிறோம்" என்கிறார் சம்மன்ஸ்.
ஜிம்பாப்வே அணியின் தரம்
அவருடன், பாகிஸ்தானில் இருந்து சிறுவயதிலேயே ஜிம்பாப்வே சென்று அங்கு கிரிக்கெட் ஆடி வளர்ந்த ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா, கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். சிறப்பாக ஸ்பின் வீசுவதுடன், அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ஆஸ்திரேலியாவுடனும், இலங்கையுடனும் அதிரடி காட்டி வெற்றிக்கு வித்திட்ட தொடக்க வீரரான பென்னட், சிறப்பான துவக்கத்தை தருபவராக உள்ளார். மேலும் மருமானி, ரையன் பர்ல் போன்றவர்களும் நடுவரிசையில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்ப்பவர்களாக உள்ளனர்.
டி20 அணியாக உருவெடுத்த ஜிம்பாப்வே
அத்துடன், அட்டகாசமாக பந்துவீசும் வேக பந்துவீச்சாளர் மசுரபாணி மற்றும் இவான்ஸ் ஆகியோர், கேப்டன் சிக்கந்தர் ராசாவுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதும் அணிக்கு பலமாக உள்ளது. நல்ல ஆல்ரவுண்டர்களும், சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்கள், நடுவரிசை பேட்ஸ்மென், நல்ல பந்துவீச்சாளர்கள் என டி20க்குத் தேவையான ஃபார்முலா நிறைந்து அணியாக இந்தப் புதிய ஜிம்பாப்வே உருவெடுத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'கிரேட் ஜிம்பாப்வே' கல் நினைவுச்சின்னத்தில் உள்ள 'தலைகீழ் V' வடிவ அமைப்பால் ஈர்க்கப்பட்டு, தங்கள் சீருடையில் அந்த அடையாளத்தைக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்கள் தங்கள் கிரிக்கெட் அணியை 'செவ்ரான்ஸ்' (Chevrons) என்று அழைக்கிறார்கள். இப்போது இந்த செவ்ரான்ஸ் அணி 'சூப்பர் எய்ட்' சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதுவும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்று, நீண்ட காலமாக கிரிக்கெட்டின் முக்கியத் தளத்தில் இடம்பிடிக்கப் போராடிக் கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு, இந்த வெற்றி மிகப்பெரிய மதிப்பைக் கொடுத்துள்ளது என்பது அனைவராலும் பாராட்டப்பட்டு ஜிம்பாப்வே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.