ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கிறார்.
தேர்தலின்போது இந்தக் கூட்டணி சார்பில் `சூப்பர் சிக்ஸ்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, அண்ணா கேன்டீன், ஆண்டுக்கு இலவசமாக 3 எரிவாயு சிலிண்டர்கள் திட்டம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் செயல்பாட்டிற்கு வருகிறது.
ஆந்திரா முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தத் தொகை மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .
இந்தத் திட்டம் மூலம் சுமார் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர்.
இந்த திட்டத்திற்காக ஆந்திர அரசு 8,745 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
இந்த திட்டத்தில் சேருவதற்கான நிபந்தனைகள் என்னவென்றால், வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15,000 வழங்கப்படும்.
மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தல் அவசியம்.
பள்ளிகளில் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முதல்வர் சந்திரபாபு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.