16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு
இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. நாட்டின் மக்கள் தொகை, குடும்ப அமைப்பு, வீட்டு வசதிகள் மற்றும் சமூக-பொருளாதார நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் மிகப்பெரிய தேசிய பணியாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872ம் ஆண்டு நடத்தப்பட்டது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2011ம் ஆண்டு 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது நடைபெறுவது 16வது கணக்கெடுப்பாகும்.
இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர் 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இணையதளம் மூலமாக பதியலாம்
முதற்கட்டமாக பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையதளம் மூலம் தாங்களே பதிவு செய்யலாம்.
இதற்காக மத்திய அரசு https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை வழங்கியுள்ளது.
16 மொழிகளில் பதிவு செய்யும் வசதி
16 இந்திய மொழிகளில் பதிவு செய்யும் வசதி உள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம்.
தனிப்பட்ட அடையாள எண்
சுய கணக்கெடுப்பை முடித்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட Reference ID (அடையாள எண்) வழங்கப்படும்.
பின்னர் அதிகாரிகள் வீடுகளுக்கு வரும்போது, இந்த எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்ப்பார்கள். எனவே, அந்த எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆக.1 முதல் நேரில் பதிவு
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்வார்கள்.
சுய கணக்கெடுப்பு செய்தவர்களின் தகவல்களும் இந்த நேரத்தில் உறுதி செய்யப்படும்.
33 கேள்விகள் கேட்கப்படும்
வீட்டின் வகை, குடிநீர் வசதி, மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிவறை, குளியலறை, கைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி, வாகனங்கள், குடும்பத்தின் உணவு முறை உள்ளிட்ட மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.
அரசுக்கான அடிப்படை தரவுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள் கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை, வீடமைப்பு, மின்சாரம், சமூக நலத் திட்டங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க அரசுக்கு முக்கிய அடிப்படைத் தரவுகளாக பயன்படும்.
2027ல் மக்கள்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு
வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும்.
2027 ஏப்ரலில் முடிவுகள் வெளியீடு
இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் 2027 ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
சரியான தகவல்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். சுய கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்களது Reference ID-யை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் வரும்போது தேவையான தகவல்களை சரியாக வழங்கினால், நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு துல்லியமான தரவுகள் கிடைக்க உதவும்.
====================