₹18,000 crore has been allocated for the Chennai-Bengaluru bullet train project. AI generated
இந்தியா

”சென்னை–பெங்களூரு புல்லட் ரயில்” : ரூ.18,000 கோடி ஒதுக்கீடு, 2035 இலக்கு : வேகம் 350 கி.மீ. பயணம் வெறும் 1 மணி நேரம்.!

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ.18000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Kannan

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே நவீனத்துவம், பாதுகாப்பான அதிவேக பயணத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருது. அந்த வகையில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு, பயணிகள் இடையே வரவேற்பு பெற்று வருகின்றன.

பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்களும் அனைத்து வசதிகளோடு, பயணிகளை ஏற்றிக் கொண்டு, பயணிக்கின்றன.

இந்தியாவில் புல்லட் ரயில்கள்

ஜப்பான், சீனாவில் இருப்பதே போல இந்தியாவிலும் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்

அந்த வகையில் மும்பை - அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

வேகம் மணிக்கு 320 கி.மீ.

முதல் கட்டமாக சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான சேவை 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும்.

தற்போது 6 மணி நேரமாக உள்ள பயண நேரம், புல்லட் ரயிலில் சுமார் 2 மணி நேரமாகக் குறையும்.

18,000 கோடிக்கு டெண்டர்

சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான இந்தியாவின் மூன்றாவது அதிவேக புல்லட் ரயில் திட்டப்பணிகள், பூர்வாங்க கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

306 கி.மீ. தூரம்

306.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்ஃபீல்டு மற்றும் பெங்களூரு பையப்பனஹள்ளி ஆகிய எட்டு முக்கிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இவற்றில் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலைய இணைப்புக்காக, பரந்தூர் தற்போதைக்கு ‘எதிர்கால நிலையமாக’ குறிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 350 கி.மீ. வேகம்

மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய புல்லட் ரயில்கள் இந்த வழித்தடத்தில் செயல்பட உள்ளன.

பயண நேரம் 1 மணிக்குள்...

இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் தற்போதைய 7 மணி நேரத்திலிருந்து வெறும் 1 மணி நேரத்திற்கும் குறைவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2035ல் முடிக்க இலக்கு

2035ம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீடு சுமார் 18,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் புல்லட் ரயில் நிலையம்

சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம் சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு, அது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள இணைப்புகள் மூலம் இணைக்கப்பட உள்ளது.

இங்கிருந்து புறப்படும் ரயில் பெரம்பூர், கொளத்தூர், ஐ.சி.எப், மாதவரம், பாடி மேம்பாலம், சென்னை பைபாஸ், சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை, அண்ணனூர், பூந்தமல்லி வழியாக அரக்கோணம் சென்றடையும்.

அங்கிருந்து சென்னை – பெங்களூரு விரைவுச்சாலையை (NE-7) ஒட்டி இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லி ரயில் நிலையம் வெளிவட்டச் சாலை மற்றும் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும்

சுரங்கப்பாதை வழியாக பயணம்

மொத்தமுள்ள 306.2 கிலோமீட்டர் வழித்தடத்தில் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

மீதமுள்ள பாதைகள் அனைத்தும் தூண்களின் மீது அமைக்கப்பட்ட மேம்பாலப் பாதையாக இருக்கும். இத்திட்டத்தில் மூன்று பிரமாண்ட சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் பகுதியில் 1.7 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையும், ஆந்திராவின் கவுண்டின்யா வனவிலங்கு சரணாலய மலைப்பகுதியில் 11.8 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும்...

பெங்களூரு நகர்ப்புறப் பகுதியில் 14.7 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும் அமையவுள்ளன.

===============================