கார்கில் போர் வெற்றி தினம் :
Kargil Vijay Diwas 2025 in Tamil : 1999ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. இதன் காரணமாக நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. எல்லையை காத்த ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்து, பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்தனர்.
தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை :
இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 26வது வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
குடியரசு தலைவர் புகழஞ்சலி :
இதையொட்டி காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள வெற்றி சதுக்கம், கார்கில் பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண வீரம், துணிச்சல் மற்றும் உறுதியைக் குறிக்கிறது. தேசத்துக்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் நாட்டு மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி புகழஞ்சலி :
பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் வெற்றி தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாள், நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் நினைவூட்டுகிறது. தாய்நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்!” எனத் தெரிவித்துள்ளார்.
=====