58 flights are being operated to evacuate Indians stranded in Middle Eastern countries due to war google
இந்தியா

58 special flights : போர் பதற்றம், வளைகுடா நாடுகளுக்கு 58 விமானங்கள் : இந்தியர்களை மீட்கும் முயற்சி தீவிரம்

போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Kannan

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்

Air India, Air India Express & IndiGo plan 58 special flights : ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 1 கோடி இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தவிக்கும் இந்தியர்கள், மீட்கும் முயற்சி

ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. விமான நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானோ தவித்து வருகிறார்கள்.

இதனிடையே, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு விமானங்கள் இயக்கம்

இதற்காக நேற்று முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2வது நாளாக இன்றும் 58 விமானங்கள் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகின்றன.

இண்டிகோ 30 விமானங்களையும், ஏர் இந்தியா 23, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 5 விமானங்களை இயக்கி வருகின்றன.

கூட்டு முயற்சியில் மீட்பு பணி

அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய தூதரகங்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து பணியாற்றி வருகின்றன.

இண்டிகோ - சிறப்பு விமானங்கள்

இண்டிகோ நிறுவனம், இந்தியர்களை அழைத்து வருவதற்காக இண்டிகோ சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இந்தியர்களை அழைத்து வருவதற்காக விமான சேவையை மேற்கொண்டு வருகிறோம். மஸ்கட், ஜெட்டா, மதினா வழித்தடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விமான சேவை இருக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அனுமதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. துபாய், புஜைரா, ஜெட்டா நகரில் இருந்து விமானங்கள் மும்பை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் புஜைராவில் இருந்து மும்பை மற்றும் டில்லிக்கு நாளை சிறப்பு விமானங்களை இயக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 4 சிறப்பு விமானங்களை இன்று இயக்கி வருகிறது.

இந்தியர்கள் விரைவாக தாயகம் வந்துசேர, புஜைராவில் இருந்து டில்லி, மும்பை, கொச்சிக்கு சிறப்பு விமானத்தை இயக்க உள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாற்று வழியில் விமானங்கள் இயக்கம்

வான்வெளியை பயன்படுத்த சில நாடுகள் கட்டுப்பாடு விதித்து இருப்பதால், நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், மாற்று வழியில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

===========