கூடுதல் கட்டணம் வசூலிப்பு :
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கான பணப் பரிவர்த்தனை விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, 2026 அக்டோபர் 1 முதல் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட இலவச பணப் பரிவர்த்தனை வரம்பை மீறினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்ன புதிய விதி?
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் கிளை கவுண்டர்கள் அல்லது பணம் செலுத்தும் இயந்திரங்கள் (Cash Deposit Machines) மூலம் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், ஐந்தாவது பரிவர்த்தனையிலிருந்து ஒவ்வொரு முறைக்கும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவிப்பு.
ஏன் இந்த மாற்றம்?
வங்கிச் சேவைகளை அதிகளவில் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணைய வங்கி சேவைகள், யுபிஐ (UPI), மொபைல் வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகளை வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும் இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
மாதந்தோறும் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கண்காணிப்பது அவசியமாகிறது.
குறிப்பாக அடிக்கடி கிளைகளுக்கு சென்று பணம் எடுக்கும் அல்லது செலுத்தும் வாடிக்கையாளர்கள் புதிய கட்டண முறையை கருத்தில் கொண்டு தங்களது பரிவர்த்தனைகளை திட்டமிட வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியும்.
வங்கித் துறையில் அதிகரிக்கும் டிஜிட்டல் பயன்பாடு :
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சங்களை எட்டியுள்ள நிலையில், வங்கிகளும் நேரடி கிளை சேவைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் தளங்களை பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவித்து வருகின்றன,
இந்தப் புதிய கட்டண நடைமுறையும் அந்த முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
எப்பொழுது இந்த நடைமுறை அமலுக்கு வரும் :
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறை, எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே புதிய விதிமுறைகளை அறிந்து செயல்படுவது நல்லது.