மலையாள நடிகை இறப்பு
Actor Dileep Case Verdict News in Tamil : மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீபை நிரபராதி என விடுவித்துள்ளது எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் விசாரணையில் பாதிக்கபட்ட நடிகைக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு கேரள மக்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த 8 ஆண்டுகால விசாரணையில் சில முக்கிய நிகழ்வுகள் திலீபின் விடுதலைக்கு காரணமாக அமைந்துள்ள நிலையில், இதில் இரண்டு முக்கிய சாட்சிகளின் இறப்பும் வழக்கின் தீர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வழக்கில் இரண்டு முக்கிய சாட்சியங்கள்
2017 ஆம் ஆண்டு நடிகையை அடையாளம் தெரியாத நபர்கள் நடிகையை காரில் கடத்தி பாலியல் அத்துமீறல் செய்து அதனை வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி நடிகர் திலிபீன் நெருங்கிய நண்பர். இதனடிப்படையிலேயே இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையுடனான தனிப்பட்ட பகைக்கு பழிவாங்கவே திலீப் இந்த சதிதிட்டத்தை அரங்கேற்றியதாக நடிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை தொடர்ந்து வந்தது.
முன்னாள் காங்கிரம் எம்.எல்.ஏ பிடி தாமஸ்
இந்த வழக்கு விசாரணையில் ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.டி தாமஸ். இவரது வாக்குமூலம் இந்த வழக்கு விசாரணையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. திருக்காக்ரா தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்தபோதிலும் தாமஸ் வெளிப்படையாக தனது கருத்தை பேசினார். இதற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து அழுத்தம் வந்ததாக அவரது மனைவி உமா தாமஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு பி.டி தாமஸ் புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
இயக்குநர் பாலசந்திர குமார்
இந்த வழக்கில் மற்றொரு முக்கிய குரலாக இருந்தவர் மறைந்த இயக்குநர் பாலசந்திரா குமார். இவர் நடிகர் திலீபிற்கும் அவரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவராக இருந்தவர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிக்கும் நடிகர் திலீபிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும் , நடிகையில் பாலியல் வீடியோவை பல்சர் சுனி திலீபிற்கு ஒரு பிரபலத்தின் மூலம் அனுப்பி வைத்ததாக பாலச்சந்திரா குமார் வெளிப்படையாக கூறினார். இவரும் கல்லீரல் மற்றும் இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. திலீப் விடுதலை செய்யப்பட்டாலும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யவிருப்பதாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.