Along with Pongal prize money, monthly stipend provided to women in Puducherry has increased from Rs 1,000 to 2,500 
இந்தியா

புதுச்சேரி:பெண்களுக்கு ஜாக்பாட் மாதம் ரூ.2,500+பொங்கல் பரிசுத்தொகை

புதுச்சேரியில் பெண்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகையோடு, மாதம் வழங்கப்படும் உதவித்தொகை 1,000ல் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Kannan

சட்டமன்ற தேர்தல்

Puducherry Pongal Gift 2026 : ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு சுமார் ஒன்றரை மாதமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

நலத்திட்டங்கள் நிறைவேற்றம்

தமிழகம், புதுச்சேரியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள், நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுகவின் 2021ல் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், 2026 தேர்தலை ஒட்டி இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியிலும் நலத்திட்டங்கள்

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தேர்தலை முன்னிட்டு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வளர்ச்சிப் பணிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

பெண்கள் உதவித்தொகை - ரூ.2,500 ஆக உயர்வு

இதில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். "புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப‌ அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் அதன் பயனாளர்களுக்கு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகை

இது மட்டுமின்றி பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என ரங்கசாமி தெரிவித்தார். இதனிடையே, புதுச்சேரியில் உள்ள 3.47 லட்சம் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூ.750 மதிப்பில் 4 கிலோ அரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சன்பிளவர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

=========================