அண்ணல் அம்பேத்கர்
Ambedkar Death Anniversary 2025 : அரசியலமைப்பை இயற்றிய மாமேதை டாக்டர் அம்பேத்கர். அவரது நினைவு தினம் டிசம்பர் 6ம் தேதி ஆண்டுதோறும் ’மகாபரிநிர்வான் திவாஸ்’ ( Mahaparinirvan Diwas ) அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தலைவர்கள் மரியாதை
ஜனாதிபதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மத்திய அமைச்சர்கள், இரு அவைகளின் எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கருக்கு பிரதமர் புகழாரம்
பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் அம்பேத்கரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவை போட்டுள்ளனர்.பிரதமர் மோடி தனது பதிவில்; ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் தினத்தில் அம்பேத்கரை நினைவுகூர்கிறோம்.
அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் மற்றும் நீதி, சமத்துவம், அரசியலமைப்பு மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நம்மை தேசிய பயணத்தில் தொடர்ந்து வழிநடத்துகின்றன. கண்ணியம் மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக திகழ்ந்து வருகிறார். சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான நடவடிக்கைளில், அவரது கருத்துக்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்” என பதவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி புகழாரம்
ராகுல் வெளியிட்ட பதிவில்; சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் உருவாக்கிய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான எனது உறுதியை வலுப்படுத்துகிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான கூட்டுப் போராட்டத்தை இந்த நாள் ஊக்குவிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பதிவு
முதல்வர் ஸ்டாலின் பதிவில், “புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்! எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்.
அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி. அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அம்பேத்கர் எனும் போராளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!, எனப் பதிவிட்டுள்ளார்.
=====