மூன்று மசோதாக்கள் தாக்கல் :
அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை, உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
பதவி நீக்க செய்ய வகை செய்யும் மசோதா :
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா இதுவாகும்.
31வது நாளில் பதவி பறிபோகும் :
இந்த மசோதாவின்படி, ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடுமையாக குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் அவர் ஈடுபட்டிருந்தால் 31வது நாள் முதல்வரின் பரிந்துரையின்பேரில் அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் பரிந்துரை அளிக்கவில்லை என்றால், தானாகவே 31வது நாளில் அவர் பதவியை இழப்பார்.
முதல்வர் பதவி பறிப்பு மசோதா :
இதேபோன்று, ஒரு முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு காவலில் இருந்தால், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதன் தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 31வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார்.
பிரதமருக்கும் பொருந்தும் மசோதா :
இதேபோன்று, இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ஷரத்துகள் பிரதமருக்கும் பொருந்தும். பிரதமராக இருக்கும் ஒருவர் தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் இருந்தால், 31வது நாள் அவர் பதவியை இழப்பார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, அமளி :
இந்த மசோதாவுக்கு AIMIM கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சி உறுப்பினர் அசாதுதின் ஒவைசி பேசுகையில், “இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு உள்ள அதிகாரத்தின் மதிப்பை குறைக்கிறது. அற்பமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் தண்டிக்கவே இது வழிவகுக்கும்” என்றார். மசோதாக்களின் நகல்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்தெறிந்து வீசினர். இதனால், அவையில் அமளி நிலவியது.
======