Anbumani Ramadoss Condemns DMK Government on Paddy Procurement Issue in Tamil Nadu Delta Farmers 
இந்தியா

விளம்பரத்தை முதலீடாக கொண்ட திமுக ஆட்சி : கடுமையாக சாடும் அன்புமணி

Anbumani Ramadoss Condemns DMK Government : காவிரி பாசன மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளதற்கு, அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்

Anbumani Ramadoss Condemns DMK Government : தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கிக் கிடப்பதால் கொள்முதல் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் 6.10 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே குறுவை அறுவடை தொடங்கியுள்ளது; அதை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலும் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்பாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தே தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளில் 25% கூட கொள்முதல் செய்யப்படாதது தான் 4 லட்சம் மூட்டைகள் தேங்குவதற்கு காரணமாகும்.

கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகளும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல்(Tamil Nadu Paddy Procurement Issue) தேங்கிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் கொள்முதல் செய்யப்படும் நெல் முட்டைகளை பாதுகாத்து வைப்பதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இல்லாததும், போதிய எண்ணிக்கையில் கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாததும் தான். அதனால், விவசாயிகள் கொண்டு வந்த 4 லட்சம் நெல் மூட்டைகள் மட்டுமின்றி, அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகளும் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளையே வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தானிய கிடங்குகள் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திடம் மொத்தம் 382 கிடங்குகள் உள்ளன. அவற்றில் 18.22 லட்சம் டன் நெல் மூட்டைகளை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் 30 லட்சம் டன் முதல் 35 லட்சம் டன் வரையிலான நெல்/ அரிசியை இருப்பு வைக்க வேண்டும் என்பதால் இப்போது இருக்கும் கிடங்குகள் போதுமானவை அல்ல. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின்றன.

ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை

இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதால் தான் அவர்கள் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண மறுக்கின்றனர். இப்போது கொள்முதல் செய்யப்படும் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டால், அவை மழையில் நனையாமல் இருப்பதற்கும், உழவர்களை காக்க வைக்காமல் அவர்கள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் அடுத்த இரு ஆண்டுகளில் கிடங்குகளின் எண்ணிக்கை குறைந்தது 700 ஆகவும், கொள்ளளவு 35 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்;

விளம்பர ஆட்சி நடத்தும் திமுக

நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த 2&ஆம் தேதி தான் காவிரி பாசன மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்தாய்வு நடத்தினார். நெல் கொள்முதலில் உழவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தினார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே 4 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால்,

மேலும் படிக்க : Anbumani : தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!

கட்டமைப்பு முழுமையாக சீரழிவு

நெல் கொள்முதல் கட்டமைப்பு எந்த அளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். விளம்பரத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆட்சி நடத்தும் திமுக, இனியாவது உழவர்களின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

====