36 மணிநேரத்திற்குள் எரிவாயு சிலிண்டர் வீடுபோய் சேர வேண்டும்
Andhra CM Chandrababu Naidu Order To Deliver LPG Gas Cylinder Within 36 Hours : ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்த 36 முதல் 48 மணி நேரத்திற்குள்வீடு தேடி விநியோகம் செய்யப்பட வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஆலோசனை
மேலும், சமையல் எரிவாயு குறித்து அமராவதியில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
15 நாட்களுக்கு தட்டுப்பாடு இல்லை
ஆலோசனைக்குப் பின் அவர் பேசும்போது, அடுத்த 15 நாட்களுக்கு ஆந்திர மாநிலத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும், தற்போது 14 ஆயிரம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் விரைவிலேயே போதிய சமையல் எரிவாயு ஆந்திராவிற்கு வர உள்ளதாகவும் அதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
36 மணிநேரத்தில் சிலிண்டர்
மேலும், பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்த 36 மணி நேரத்திற்குள் அவர்களின் வீடு தேடி சிலிண்டர் சென்று சேர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நகர்ப்புறங்களில் எலக்ட்ரிக் மின்சாதன பயன்பாடு, இண்டக்ஷன் பயன்பாடு அதிகரிக்கும்படி செய்ய வேண்டும் என்றும், சிலிண்டர் எரிவாயு உபயோகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கட்டாய சிலிண்டர்
ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் கோயில்களுக்குத் சமையல் எரிவாயு சிலிண்டர் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திராவில் கள்ளச்சந்தையில் சிலிண்டர்
ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
அப்படி கள்ளச் சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கள்ளச் சந்தையை தடுக்க e-KYC மற்றும் Otp
மேற்கு ஆசிய மோதலால் ஏற்படும் விநியோகத் தடையைத் தவிர்க்கவும், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், சமையல் எரிவாயு கள்ளச்சந்தையைத் தடுக்கவும்,
e-KYC மற்றும் Otp மூலம் கள்ளச்சந்தை மூலம் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வண்ணம் தினசரி கண்காணிப்பு நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மக்களிடையே பதற்றத்தைத் தவிர்க்க, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
====