திருப்பதி லட்டு - வெடித்த சர்ச்சை
Pawan Kalyan proposes Sanatana Dharma Parirakshana Board : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விவகாரம் நாளுக்கு நாள் பூதகரமாக வெடித்து வருகிறது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக, விலங்குகளின் கொழுப்பு பயன்பட்டது, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வெளிச்சத்திற்கு வந்தது.
திருப்பதி புனிதமான ஆன்மிக தலம்
இது பக்தர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோவில், சனாதன தர்மம் குறித்து, துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார்.
“ உலகளாவிய இந்து சமூகத்திற்கு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு புனித யாத்திரை மையமாகும். இது ஒரு புனிதமான ஆன்மிக தலம்.
திருப்பதி லட்டு - உணர்வுப் பூர்வமானது
திருப்பதி லட்டு வெறும் இனிப்பு மட்டும் கிடையாது. அது ஒரு உணர்ச்சி பூர்வமான, இதயத்தோடு ஒன்றிய கோவில் பிரசாரம். அதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பக்தியுடன் வழங்கி மகிழ்கிறோம். ஏனெனில் அது அனைவரது கூட்டு நம்பிக்கையையும் ஆழ்ந்த பக்தியையும் உள்ளடக்கியது. அதை பிரசாதமாக உண்ணும் போது கிடைக்கும் திருப்தி அளவிட முடியாத ஒன்று.
ஆண்டுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை
சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வந்து பெருமாளை தரிசிக்கிறார்கள். அவர் அளிக்கும் லட்டினை பிரசாதமாக பெற்று மகிழ்கிறார்கள். சனாதனர்களின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகள் கேலி செய்யப்படும்போது அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும்போது, அது வெறும் புண்படுத்தும் விஷயம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மதச்சார்பின்மைக்கு இருவழிப்பாதை
அது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், பக்தியையும் சிதைக்கிறது. மதச்சார்பின்மை இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதையை பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க முடியாது.
சனாதன பாதுகாப்பு வாரியம்
நமது சனாதன தர்மம் பழமையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் நாகரீகங்களில் ஒன்றாகும். மேலும் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை நிறுவ வேண்டிய நேரம் இது. அது காலத்தின் கட்டாயம். ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்” இவ்வாறு அந்தப் பதிவில் பவன் கல்யாண் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடர் சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், பவன் கல்யாணின் இந்த கருத்து ஏழுமலையான் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-----