Andhra prepares in full swing to face severe cyclonic storm, 1,763 relief camps have been set up
’அர்னாப்’ புயல்
வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல், ஆந்திரா நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் இது நகர்ந்து வருகிறது.
தயார் நிலையில் ஆந்திரா
மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயலானது தாக்கும் போது, சுமார் 5.7 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் உள்ள 2,460 கிராமங்கள் மற்றும் 92 நகர்ப்புறப் பகுதிகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது, மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2,017 கிராமங்களில் வசிப்போர் வெளியேற்றம்
இதன் ஒரு பகுதியாக, 2,107 கிராமங்கள் மற்றும் வார்டுகளைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மருத்துவ உதவி அவசியமாகத் தேவைப்படக்கூடிய கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,711 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பான மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,763 நிவாரண முகாம்கள்
புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்களுக்குத் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க மாநிலம் முழுவதும் 1,763 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படைகள்
அவசரகால மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக, 11 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையான SDRF குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
புயலின் தாக்கத்தைப் பொறுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட மற்றும் மண்டல அளவில் 2,907 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக 3,185 அதிகாரிகள் களத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடலோரச் சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால், மின் கம்பிகள் மற்றும் விழுந்த மரங்களின் அருகே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்க ‘மன மித்ரா’
மரங்கள் விழுதல், வெள்ள நீர் தேங்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து ‘மன மித்ரா’ (Mana Mitra) வாட்ஸ்அப் சேவை மூலம் 9552300009 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் கம்பி சேதம் தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
அரசை பின்பற்ற அறிவுறுத்தல்
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆந்திர மாநில அரசு பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
===================