கோலார் தங்கச் சுரங்கம்
இந்தியாவில் கர்நாடக மாநிலம் கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து, தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. கிடைக்கும் தங்கத்தை விட, அதை வெட்டி எடுக்க கூடுதல் செலவாவதால், கேஜிஎப் தங்கச் சுரங்கம் மூடப்பட்டது.
ஆந்திராவில் தங்கச் சுரங்கம்
இதனால் 25 ஆண்டுகளாக இந்தியாவில் தங்க உற்பத்தி வெறும் 1.5 டன் என்ற அளவில் தான் இருக்கிறது. இதனால், பெருமளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், நல்வாய்ப்பாக ஆந்திராவில் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
எங்கே இருக்கிறது சுரங்கம்?
நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 50 டன் தங்கம்
இந்த கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் பூமிக்குள் புதைந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆண்டுக்கு 1000 கிலோ சுத்தமான தங்கத்தை இங்கிருந்து உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
எவ்வளவு டன் தங்கம் இருக்கிறது?
தங்கம் வெட்டி எடுக்க 1,500 ஏக்கர் நிலத்தை தோண்ட உள்ளனர். கூடுதலாகவும் நிலங்களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். இந்த தங்கச் சுரஙத்தின் மதிப்பு ரூ.7,500 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு?
ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் ‘ஜேஜிஎஃப்’ (JGF) எனப்படுகிறது. இதை ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின்பு, தனியார் சார்பில் தோண்டப்படும் முதல் தங்கச் சுரங்கமாகும். 1500 ஏக்கரில் அமைய உள்ள இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 1,000 கிலோ தூய தங்கம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய இயலும்.
ராயலசீமா வளர்ச்சி பெறும்
இந்த சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிட் மற்றும் திரிவேணி எர்த்மூவர்ஸ், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறார்கள்.
இந்த சுரங்கப் பணிகள் வேகமெடுக்கும் பட்சத்தில் குர்னூல் மாவட்டம் அமைந்திருக்கும் ராயலசீமா பகுதி பெரு வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.
கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 2000-ம் ஆண்டில் மூடப்பட்டபின் நாட்டில் ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டும் ஆண்டுக்கு 1.50 டன் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது.
இப்போது ஜொன்னகிரியில் தங்கம் கிடைக்கும் பட்சத்தில் தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி சுமை குறையும்.
ஆண்டுக்கு 800 கிலோ தூய தங்கம்
தினசரி அதிகபட்சமாக 2,500 டன் தாதுக்கள் வரை ஜொன்னகிரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்க இயலும். முதல் ஆண்டான 2026-27-ம் ஆண்டில் 800 கிலோ தூய தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
2-வது ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 1000 முதல் 1500 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு வேலை
“சுரங்கப் பணியில் 90% பணியாளர்கள் குர்னூல் மாவட்டத்தில் இருந்துதான் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை அமைத்துத் தரவும், குடும்பங்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தங்கத்தை வெட்டி எடுக்க நவீன இயந்திரங்கள்
ஜொன்னகிரி மட்டுமல்லாது ராமகிரி, ஜவாகுலா, சிகுருகுந்தா, பிஸ்நாதா பகுதியிலும் சுரங்கம் அமைக்க அரசு அனுமதித்துள்ளது. சுரங்கம் தோண்டுவதற்கு உலகிலேயே அதிநவீன எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த இருக்கிறார்கள்.
அதிக அளவில் தங்கம் கிடைக்கும்
கோலாருக்கு அடுத்தார்போல் ஜொன்னகிரி மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய நிலவியல் துறையினர் முதலில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டை விட தங்கம் வளம் இங்கு அதிகமாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
20 ஆண்டுகள் கிடைக்க வாய்ப்பு
15 முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கம் வெட்டி எடுக்க முடியும், நிலத்தை துளையிடுதல், தோண்டுதல், பாறைகளை அரைத்தல் போன்றவை கார்பன் இன் லீச் (சிஐஎல்) தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்.
================