களைகட்டிய தேர்தல் பணிகள்
5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரச்சார வேலைகளை துவக்கி வருகின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
வேட்பாளர்களை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு விவகாரங்களில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் ஆணையம் தமிழக முழுவதும் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி உள்ளது.
பணம் பறிமுதல்
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்கவும் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலும் ரொக்கமாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால், அந்த பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஆன்லைனில் பணம் பட்டுவாடா?
டிஜிட்டல் யுகம் என்பதால் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை நடக்குமா என்ற சந்தேகங்களும் தேர்தல் அதிகாரிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் வங்கிகளுக்கு மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பணப்பட்டுவாடா - செக்!
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணமாக தான் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த முறை அவை ஜிபே, போன் பே அல்லது பேடிஎம் மூலம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
வங்கிக் கணக்குகள் கண்காணிப்பு
இதை முன்கூட்டியே தடுத்து 100 சதவீதம் நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு
அதன்படி ஜி பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் நடைபெற்றால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதே போல சமீபத்திய ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் தற்போது செயல்பாட்டிற்கு வந்து இருக்கும் கணக்குகளின் விவரங்களையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகள் நடந்தாலும், அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
* ஏதாவது தவறு நடந்தால், சந்தேகம் இருந்தால் உடனே தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்
* வங்கி கணக்கில் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டாலும் அல்லது எடுக்கப்பட்டாலும் உடனே தெரியப்படுத்த வேண்டும்.
* குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் உள்ள வங்கி கணக்குகளில் இருந்து பல நபர்களுக்கு ஆர்டிஜிஎஸ் அல்லது நெப்ட் மூலமாக தொடர்ச்சியாக பணம் அனுப்பப்பட்டால், அவற்றின் முழு விவரத்தையும் தர வேண்டும்
* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
* வேட்பாளர்களின் உறவினர்கள், நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் ஆகிய அனைவரின் வங்கி கணக்குகளையும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்
* இவர்களது வங்கி கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நடக்கும் அனைத்து பரிவர்த்தனை விவரங்களை சமர்பிக்க வேண்டும்
* வேட்பாளர்கள் வங்கி கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக டெபாசிட் செய்தாலும் அல்லது எடுத்தாலும் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும்
வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை
சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறிழைத்தால் ரூ.10 லட்சம் அபராதம்
தவறுகளை மறைக்க முயற்சித்தால் வருமானத் வரித்துறை மூலம் நேரடியாக 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகள், டிஜிட்டல் வழியில் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த அரசியல்வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
==================