Global Digital Health Summit 2026 India source: google
இந்தியா

மருத்துவமனையில் இனி மொழிப் பிரச்சினையே இல்லை : நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பாலமாக மாறும் 'பாஷினி' AI!

மத்திய அரசின் பாஷினி AI தொழில்நுட்பம் பற்றிய விரிவான தகவல்.

Kavitha prasanna

BHASHINI AI Healthcare Revolution AIIMS JIPMER Language Barrier

Global Digital Health Summit 2026 India: வெளிமாநிலங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, மருத்துவர்கள் பேசும் மொழி புரியாமல் நோயாளிகளும், நோயாளிகளின் பிரச்சனையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாமல் மருத்துவர்களும் சிரமப்படுவது வழக்கம்.

இந்த நீண்டகால மொழித் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் 'பாஷினி' (BHASHINI) தளம் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு 2026

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 'உலக டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு 2026'-ல், இந்தத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டன. நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்களான எய்ம்ஸ் (AIIMS), ஜிப்மர் (JIPMER) மற்றும் இந்திய ராணுவ மருத்துவச் சேவை இயக்குநரகம் ஆகியவை இதில் இணைந்துள்ளன.

எந்த மருத்துவமனையில் என்ன மாற்றம்? - இ-பாஷினி செயல்பாடுகள்

சுகாதாரத் துறையில் இ-பாஷினி தொழில்நுட்பம் கொண்டு வரவுள்ள நடைமுறை மாற்றங்கள்:

1.எய்ம்ஸ் மருத்துவமனை:

வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளும் மருத்துவர்களும் அவரவர் தாய்மொழியிலேயே பேசினாலும், அவர்களின் உரையாடலை உடனுக்குடன் மொழிபெயர்த்து புரிந்துகொள்ள இந்த AI கருவி உதவுகிறது.

2. ஜிப்மர் மருத்துவமனை:

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது பதிவு செய்யும் குரல் குறிப்புகளை (Voice Notes), நேரடியாக நோயாளிகளின் முறையான மருத்துவ ஆவணங்களாக (Medical Records) மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. இந்திய ராணுவ மருத்துவச் சேவை:

ராணுவ மருத்துவர்கள் வாய்மொழியாகக் கூறும் மருத்துவக் குறிப்புகள், எந்தப் பிழையுமின்றித் தானியங்கி முறையில் எழுத்து வடிவமாக மாற்றப்படுகின்றன.

பாஷினி தளத்தின் வளர்ச்சியும் நோக்கமும்

மொழிப் பாகுபாடு காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் அத்தியாவசிய மருத்துவச் சேவை மறுக்கப்படவோ, தாமதமாகவோ கூடாது என்பதே தங்களது இலக்கு என பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் நாக் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்களுக்கும் உயர்தர மருத்துவ ஆலோசனை எளிதில் சென்றடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது பாஷினி தளம் எட்டியுள்ள முக்கிய இலக்குகள்

36 இந்திய எழுத்து மொழிகள், 23 இந்தியப் பேச்சு மொழிகள் மற்றும் 35 சர்வதேச மொழிகளைக் கையாளும் திறன் கொண்டது.

இதுவரை 11 பில்லியனுக்கும் அதிகமான மொழிபெயர்ப்பு மற்றும் தொழில்நுட்பச் செயலாக்கங்களை நிறைவு செய்துள்ள இத்தளத்தில், நாள்தோறும் சராசரியாக 2.4 கோடி செயலாக்கங்கள் நடைபெறுகின்றன.

மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, மொழித் தடைகளை உடைப்பதன் மூலம் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் சிகிச்சையின் துல்லியத்தன்மையையும் இந்த முயற்சி பன்மடங்கு அதிகரிக்கும்.

=========