பீகார் சட்டசபை தேர்தல் :
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடே எதிர்பார்க்கும் இந்த தேர்தலை எதிர்கொள்ள அம்மாநில அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்- பாரதிய ஜனதா கூட்டணி, ராஷ்டிரீய ஜனதா தளம் தலைமையிலான மகா பந்தன் கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. சாதியை அடிப்பைடையாக கொண்ட இந்த மாநிலத்தில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் மல்லுக்கட்டி நிற்கின்றன.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரும், தனிக்கட்சி தொடங்கி விட்டு தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
என்டிஏ கூட்டணி செல்வாக்கு :
என்டிஏ கூட்டணி மக்களவை தேர்தலில் 40க்கு 39 இடங்களை கைப்பற்றி, காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த அசுர வெற்றி சட்டசபை தேர்தலில் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்போடு காய்களை நகர்த்தும் முதல்வர் நிதிஷ்குமார், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு :
அதன்படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்கள் கணிசமாக இடம்பெற முடியும். இந்த அறிவிப்பு, என்டிஏ கூட்டணிக்கு அதிக அளவில் மகளிர் வாக்குகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த மகளிர் மட்டுமே இந்த சலுகை மூலம் வேலைவாய்ப்பு பெற முடியும்.
இளைஞர்களுக்காக தனி ஆணையம் :
பீகாரில் இளைஞர் ஆணையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், பீகார் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதல் ஆணையத்தின் நோக்கமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு ரூ.100 கோடி மானியம் :
பீகார் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, 100 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
====