பிகார் சட்டமன்ற தேர்தல் :
Bihar Assembly Election 2025 Schedule Date Update : 243 சட்டசபை தொகுதிகளை கொண்டது பிகார் மாநிலம். நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடந்து வருகிறது. நவம்பர் 22ம் தேதியுடன் பிகார் சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தும் பொருட்டு, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு திருத்தம் :
முதல் முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் பிகாரில் செயல்படுத்தியது. இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிறப்பு திருத்தம் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்தநிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
அக்.3ல் தேர்தல் அட்டவணை? :
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும்(Bihar Assembly Elections 2025 Schedule Date) என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் காலியாக உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் வெள்ளிக்கிழமை ( அக். 3 ) அறிவிக்கப்படுகிறது.
என்டிஏ - ஆர்ஜேடி நேரடிப் போட்டி :
சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. என்டிஏ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 102, பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் எல்ஜேபி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
2020 பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி 144, காங்கிரஸ் 70, மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறையும் இண்டியா கூட்டணியில் இதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி :
பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. 2020 தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. வரும் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி மீண்டும் 20 தொகுதிகளில் களமிறங்கும் எனத் தெரிகிறது. முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ்யின் வெற்றி வாய்ப்பு, எத்தனை தொகுதிகள், யாருக்கு பாதிப்பு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க : பிகாரில் நவம்பரில் தேர்தல் ! : 3 கட்டங்களாக நடத்த பரிசீலனை
மத்திய பார்வையாளர்கள் :
470 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் 320 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். 60 பேர் ஐபிஎஸ், 90 பேர் ஐஆர்எஸ் அதிகாரிகள் ஆவர். “தேர்தலின்போது நேர்மை, நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு மத்திய பார்வையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
==============