பிகார் சட்டமன்ற தேர்தல் 2025 :
Bihar Assembly Elections 2025 Campaign End : 243 தொகுதிகளைக் கொண்டது பிகார் சட்டப்பேரவே. இங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் வாக்குப்பதிவை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நமவபர் 6ம் தேதி 121 தொகுதிகளிலும், நவம்பர் 11ம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி விட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
மோடி, அமித் ஷா, ராஜ்நாத் பிரசாரம்
பரப்புரைக்கு இறுதி நாளான இன்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
வெற்றியை உறுதி செய்யும் பெண் சக்தி
பிரதமர் மோடியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ”பிகாரில் பெண்கள் சக்தி சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அசாதாரண ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு
முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். நாளை மறுநாள் ( நவம்பர் 6 ) வாக்குப்பதிவு(Bihar Election 2025 Poll Date in Tamil) நடைபெறுகிறது. இதற்கு தேவைப்படும் பொருட்கள் வாக்குச் சாவடிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படுகின்றன.
நவ.14ல் வாக்கு எண்ணிக்கை
121 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும். இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.