நிதிஷ்குமார் அரசியல்
Bihar CM Nitish Kumar Political Career in Tamil : 1977ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது ஜனதா கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார் நிதிஷ். இந்திராவின் எமர்ஜென்சி காலத்திற்கு பின் இந்த தேர்தல் நடந்தது. இதனால், நாடெங்கும் இந்திராவுக்கு எதிரான அலை வீசியது.
எனவே, ஜனதா கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவர் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றபடி லாலு பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான் போன்ற ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் வெற்றிவாகை சூடினர் தொகுதியை கைப்பற்றினர்.
தோல்வியை தழுவி வெற்றியில் நிதிஷ்
ஆனால், கணிப்புக்கு மாறாக, நிதிஷ் குமார் தோல்வியை தழுவினார். முன்னாள் பிரதமர் இந்திரா சுட்டு படுகொலை செய்யப்பட்டதால், 1984 - 85 பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., ஆதரவு அலை வீசியது.
தேர்தல் கணக்குகள், அரசியல் வியூகங்கள், நிபுணர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப, ஜனதா கட்சி அந்த தேர்தலில் பெரிதாக தங்களை நிலைநிறுத்த முடியவில்லை.
ஆனால், அந்த தேர்தலில் சொந்த மாவட்டமான நாலந்தாவின் ஹார்நாட் தொகுதியில் போட்டியிட்ட நிதிஷ் குமார், நானும் இருக்கிறேன் என வெற்றி வாகை சூடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அமைச்சர் அரியாசனத்தில் நிதிஷ்
அதன்பின், மாநில அரசியலில் இருந்து மத்திய அரசியல் பக்கம் கவனத்தை திருப்பிய நிதிஷ்குமார், 1989 டிசம்பரில் நடந்த லோக்சபா தேர்தலில் பீஹாரின், பர்ஹ் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியால், வி.பி.சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணியின் மத்திய அமைச்சரவையில், மத்திய வேளாண் துறை இணையமைச்சர் பதவி அவரை தேடி வந்து அரியாசனம் தந்தது. இவரது ஜனதா கட்சி தோழர்களான சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் சீனியர் எம்.பி.,களாக இருந்ததால், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சமதா கட்சியின் வேட்பாளராக நிதிஷ்
1994 காலக்கட்டத்தில் தான் பீஹாரில் மிக முக்கியமான அரசியல் திருப்பம் ஏற்பட்டது. லாலு பிரசாத், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, ஜனதா கட்சியில் இருந்து விலகினார் நிதிஷ். உடனடியாக சமதா கட்சியை துவங்கினார்.
கடந்த, 1995 பீஹார் சட்டசபை தேர்தல் நடந்தபோது, சமதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை
அப்போது பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்படாததால், 324 சட்டசபை தொகுதிகள் இருந்தன. அந்த தேர்தலில், லாலு மிக எளிதாக பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை பிடித்தார். நிதிஷின் சமதா கட்சி வெறும், ஏழு தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிதிஷ் குமார், அதன்பின், கடந்த 30 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்
இடையில் 1996, 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் லோக்சபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார். கடந்த, 2000ம் ஆண்டில் முதல் முறையாக பீஹார் முதல்வராக அவர் பதவியேற்ற போது கூட, எம்.பி.,யாக தான் இருந்தார். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.
எம்பி தேர்தலில் வெற்றி, தோல்வி
கடந்த, 2004 லோக்சபா தேர்தலில் தன் பாரம்பரிய பர்ஹ் தொகுதியிலும், நாலந்தா தொகுதியிலும் போட்டியிட்டார் நிதிஷ். அவர் எதிர்பார்த்தது போல, பர்ஹ் தொகுதி கைகொடுக்கவில்லை. இருந்தாலும் சொந்த தொகுதியான நாலந்தாவில் வெற்றி பெற்றார்.
தொகுதிக்காக எத்தனை பாடுபட்டாலும், தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டார் நிதிஷ்.
சட்டசபை தேர்தல் நதிஷ்குமாருக்கு அவசியம் இல்லை
பீஹாரின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் வாய்ப்பு, 2006ல் அவரை தேடி வந்தது. இதனால், எம்.பி,பதவியை ராஜினாமா செய்த அவர், அப்போது முதல் எம்.எல்.சி., எனப்படும், மேல்சபை உறுப்பினராகவே தொடர்ந்து வருகிறார்.
நிதிஷ் குமாரின் மேல்சபை உறுப்பினர் பதவி காலம் வரும், 2030ல் தான் முடிவுக்கு வருகிறது. எனவே, அதுவரை சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை
கருணாநிதி சாதனை முறியடிப்பு
கடந்த 2000 மார்ச் துவங்கி இதுவரை பல்வேறு ஆட்சி காலங்களில் 19 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையை நிதிஷ் பெற்றுள்ளார். இதன் வாயிலாக நாட்டில் நீண்ட காலம் முதல்வர்களாக இருந்த முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு ஆட்சி காலத்தின் வாயிலாக 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த நிலையில் அவரின் சாதனையை நிதிஷ் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
======