கேரள சட்டமன்ற தேர்தல்
அண்டை மாநிலமாக கேரளாவில் 140 தொகுதிகளிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக என அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆட்சியை பிடிக்க முனைப்பு
பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை சுவைத்த பாஜகவும், இந்த முறை கணிசமாக இடங்களை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது.
பாஜக தேர்தல் அறிக்கை
இந்தநிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று இருக்கின்றன.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
* அதன்படி, கேரளாவில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன் வழங்கப்படும்.
* இதற்காக மகளிருக்கு பக் ஷய ஆரோக்கிய சுரக் ஷா’ அட்டை வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களின் பெண் தலைவிகள், கணவரை இழந்தவர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்
* ஆண்டுதோறும் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 2 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கப்படும்.
* வேளாண் துறையில், ஆதரவு தேவைப்படும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.
*நிலம் மற்றும் வனத்துறை சட்டங்களில் திருத்தங்கள் செய்வதன் மூலம் தோட்ட நிலங்களில் பல்வேறு பயிர் சாகுபடி அனுமதி
* கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும்.
* கேரள மக்களுக்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் நிறுவனங்களுக்கு சலுகைக் கடன்
* விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றிலும் பெரிய தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்
* திருவனந்தபுரம் – கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும்.
=====