அசாமில் சட்டசபை தேர்தல்
BJP government has surprised 40 lakh heads of households in Assam, where assembly elections are due, by providing Rs 9,000 each :தமிழகத்தை போன்றே அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அசாமில் 2020ம் ஆண்டு 18 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 830 ரூபாய் என தொடங்கப்பட்ட உரிமைத் திட்டம், தற்போது 40 லட்சம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 250 ரூபாய் என்ற அளவில் விரிவுபட்டுள்ளது.
உரிமைத்தொகை 5,000 + பரிசுதொகை 4,000
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகை மொத்தமாக 5000 ரூபாயும், ஏப்ரலில் கொண்டாடப்படும் அசாமியப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு ரூ.9,000 வரவு
மொத்தம் 9 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஒரே நாளில் 3,800 கோடி ரூபாயை அசாம் அரசு விடுவித்துள்ளது. இது அசாம் மாநில வரலாற்றில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அசாமில் ஒருடோனாய் திட்டம்
தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் அசாம் மாநிலத்தில் ஒருனோடோய் திட்டம் ( ORUNODOI SCHEME ) என்கிற பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ. 1,250 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ரூ. 5000, மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ரூ. 4000 என மொத்தமாக ரூ. 9000 அம்மாநில பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது பாஜக அரசு.
ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம்
அசாமில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும் வகையில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அசாம் அரசு விளக்கம்
மகளிர் கணக்கில் 9,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தேர்தல் வரவுள்ளதால் 9 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக எழுந்த விமர்சனத்தை மறுத்துள்ளார்.
தகுதியுள்ள ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான உதவி தான் இது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
=====