பாஜகவின் புதிய தேசியத் தலைவர்
BJP New National President Election: Senior Leaders Submit Nomination Papers Of Nitin Nabin At Party Headquarters : பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவுபெற்ற நிலையில், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த மாதம் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார். அவரே தேசியத் தலைவராக பின்னர் பொறுப்பேற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய தலைவர் - வேட்புமனு தாக்கல்
அதன்படி, பாஜகவின் புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
பாஜக அலுவலகத்தில் மூத்த தலைவர்கள்
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜி.கிஷன் ரெட்டி, மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்
நிதின் நபின் வேட்புமனு தாக்கல்
பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின், தேசியத் தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் பாஜகவின் புதிய தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
வேட்புமனு தாக்கல் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், பரிசீலனை மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறுகிறது.
தேசிய தலைவர் நிதின் நபின்
வேட்பாளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதன்படி, 45 வயதே நிரம்பிய நிதின் நபின் புதிய தேசியத் தலைவராகிறார்.
தேர்தல்களை வழி நடத்தும் நிதின் நபின்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இவற்றில் நிதின் நபின் பங்களிப்பு முக்கிய இடம் பெறும். பாஜகவின் புது ரத்தம் பாய்ச்சும் வகையில், இளம் தலைவரை தேசிய அளவில் பொறுப்பில் அமர்த்துவது அக்கட்சியின் செயல்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்யும் எனத் தெரிகிறது.
=========================