2047 வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் :
மத்திய அரசின் செயலாளர்களுடன் நடைபெற்ற மூன்றாவது உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி நிர்வாக சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு, தரவு பயன்பாடு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை கருத்தில் கொண்டு அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சைலோ' மனப்பான்மையை கைவிட வேண்டும்:
அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தனித்தனியாக செயல்படும் நடைமுறையை மாற்றி, ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.
நிர்வாகத்தில் காணப்படும் கிடைமட்ட மற்றும் செங்குத்து தடைகளை உடைப்பதன் மூலம் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் நலனில் அக்கறை:
குறிப்பாக பிரதமர் கூறுகையில் இளைஞர்கள் நம் நாட்டில் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருவதால் நமது செயல்பாடுகள் அதனை ஒட்டியே இருக்க வேண்டும் எனவும் கொள்கை வடிவமைப்பில் புதிய சிந்தனைகள் இடம்பெற வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் இளைஞர்களுடன் அரசுத் துறைகள் நேரடி தொடர்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
மாணவர்களின் கருத்துகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
தரவு ஒரு தேசிய சொத்து :
அரசுத் துறைகள் சேகரிக்கும் தரவுகள் தனித்தனியாக செயல்படுவதால் அவற்றின் முழுப் பயன் கிடைப்பதில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தரவுகளை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், தரவை தேசிய சொத்தாகக் கருதி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
AI பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல் :
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிர்வாகத்தில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் மனித கண்காணிப்பு மற்றும் தீர்மானிக்கும் திறன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
அரசின் சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்க AI முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
விக்சித் பாரத் 2047 இலக்கு :
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் "விக்சித் பாரத்" இலக்கை அடைய, அனைத்து அமைச்சகங்களும் நீண்டகால பார்வையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நிர்வாக திறன், தொழில்நுட்ப முன்னேற்றம், தரவு பயன்பாடு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு ஆகியவை இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் அவர் கூறினார்.