Central Government Bharat Taxi App Launch adds up to 45, 000 users day as nationwide Trip News in Tamil Google
இந்தியா

பட்டைய கிளப்பும் பாரத் டாக்சி : மத்திய கூட்டுறவு அமைச்சகம் பதிவு!

'ஊபர், ஓலா, ராபிடோ' உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது.

Baala Murugan

பாரத் டாக்சியில் பதிவு செய்யும் புதிய பயனர்கள்

Central Government Bharat Taxi App Launch : புது டெல்லியால் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாரத் டாக்சி செயலியில் தினசரி, 45,000 புதிய பயனர்கள் பதிவு செய்து வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பாரத் டாக்சி செயலி அறிமுகம்

ஓலா, ராபிடோ, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள், நாடு முழுதும் கார் மற்றும் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்த தனியார் நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலிகளால் உபயோகப்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைகளை சரிசெய்யும் விதமாக இதனை மத்திய அரசே கையில் எடுத்து பொதுமக்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தற்போது உருவாக்கி முதல்கட்டமாக டெல்லியில் அமல்படுத்தியுள்ள செயலிதான் இந்த பாரத் டாக்சி செயலி.

பாரத் டாக்சி செயலியின் சிறப்பம்சம்

டெல்லியில் உள்ள பாரத் டாக்சி செயலியை முதன் முதலில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா துவக்கி வைத்தார்.

தனி கமிஷன் கிடையாது

'ஓலா, ராபிடோ, ஊபர்' போன்ற நிறுவனங்களின் செயலிகளில் உள்ள அம்சங்கள் அனைத்தும், 'பாரத் டாக்சி' செயலியில் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக, கமிஷன் வசூலிக்கப்படாது. அதாவது, பயணி செலுத்தும் முழுத் தொகையும் டிரைவருக்கே கிடைக்கும்.

மத்திய கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவு

இதுகுறித்த சமூக வலைதளத்தில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில் 'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை, 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பதிவு செய்துள்ளனர்.

பயனர்கள் வரவேற்பு

தினசரி 40,000 - 45,000 புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். 'கூகுள் பிளே ஸ்டோரில்' 9-வது இடத்திலும், 'ஆப்பிள் ஆப் ஸ்டோரில்' 13-வது இடத்திலும் இந்த செயலி முன்னணியில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தீவிரம்

விமான நிலையங்களில் ஓலா, ஊபர் நிறுவனங்களை போல, பாரத் டாக்சிக்கும் பிரத்யேக, 'பிக்கப், டிராப்' பாயின்ட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மக்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக, வரும் நாட்களில், சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.