Central Government has approved the printing of ₹10 and ₹20 notes on plastic. AI generated
இந்தியா

”பிளாஸ்டிக்கிற்கு மாறும் ரூ.10.20 நோட்டுகள்” : மத்திய அரசு ஒப்புதல் : ரூ.200 கோடிக்கு அச்சடிப்பு, விரைவில் புழக்கம்..!

10 மற்றும் 20 ரூபாய்களை பிளாஸ்டிக் நோட்டுகளாக அச்சடிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

Kannan

இந்தியாவில் ரூபாய் பயன்பாடு

இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு தொடங்கியது முதலே பேப்பர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழையதாவது, கிழிவது போன்ற காரணங்களால் மீண்டும் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டி இருக்கிறது. இவற்றுக்கு கணிசமாக செலவிட வேண்டிய கட்டாயமும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

பிளாஸ்டிக் ரூபாய் தாள்கள்

எளிதில் சேதம் அடையாத நீண்ட காலம் உழைக்கக் கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கின்றன. இதேபோன்று இந்தியாவிலும் பாலிமரை கொண்டு நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்து இருந்தது.

மத்திய அரசு ஒப்புதல்

இதற்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. லோக்சபாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எழுப்பபப்ட்ட கேள்விக்கு மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி விளக்கம் தந்துள்ளார்.

முதலில் ரூ.10,20 நோட்டுகள்

“ ரூபாய் நோட்டுகளை அச்சிடும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியாக, 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை 'பாலிமர்' (பிளாஸ்டிக்) தாளில் அச்சிட்டு சோதனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நீடித்து உழைக்கும் பாலிமர்

பாலிமர் நோட்டுகள் பிளாஸ்டிக் போன்ற ஒரு வகையான நீடித்த உழைக்கக்கூடிய பொருளால் ஆனவை.

இவை சாதாரண காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை மற்றும் எளிதில் கிழிந்துபோகாது.

இதனால் தான் சோதனை முயற்சியாக ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

முதல் கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக அச்சடிக்கப்படும்.

அதேசமயம் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகளுடன் இவை கூடுதலாகவே மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

ரூ.200 கோடிக்கு அச்சடிப்பு

தலா 100 கோடி எண்ணிக்கையிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இது வெற்றிகரமாக முடிந்த பிறகு, முழு அளவில் புழக்கத்திற்கு வரும். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவை, அதிகம் நீடித்து இருக்கக்கூடியவை என நிரூபணம் ஆகி உள்ளது.

இப்போதைக்கு காகித நோட்டுகள் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் என இரண்டுமே பொதுமக்களுக்கு இணையாக தொடர்ந்து செயல்படும்.

நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டு இருந்தது.

தேச பாதுகாப்பு கருதி கடுமையான விதிகள் விதிக்கப்பட்டன.

தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அரசு பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

சீனா அல்லது பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

இந்த நோட்டுகளுக்கான மூலப்பொருட்களை சீனா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

சேதம் அடையாது, நீடித்து உழைக்கும்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடையாது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் பணத்தை அச்சிடும் செலவு குறையும் என ரிசர்வ் வங்கி கருதுவதாக” அமைச்சர விளக்கம் அளித்தார்.

கள்ள நோட்டு ஆபத்தும் இருக்காது

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பொருத்தவரை இவற்றை சாதாரணமாக கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது. பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்க நவீன இயந்திரங்கள் தேவை. இவற்றின் விலை பல கோடி ஆகும்.

எனவே, கள்ள நோட்டு ஆபத்து இருக்காது என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ருமேனியா, புருனே, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு மாறி உள்ளன.

======================