இந்தியாவின் எரிபொருள் தேவை
கச்சா எண்ணெய், திரவ எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளை மட்டுமே இந்தியா நம்பி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி முழுத் தேவையையும் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை.
எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு
எனவே, எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எத்தனால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சமையல் செய்யவும் எத்தனால்
இந்நிலையில், வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு (எல்பிஜி) பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரைவு கொள்கை உருவாக்கம்
இது தொடர்பான வரைவு கொள்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
இந்த கொள்கையில், எத்தனாலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், மானிய திட்டங்கள் மற்றும் இதற்கான தனி விநியோகச் சங்கிலியை உருவாக்குவது இடம்பெறும்.
எரிபொருள் விநியோக நிறுவனங்களின் கூட்டமைப்புகளும் அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் இது தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனால் உற்பத்தி 2 கோடி லிட்டர்
இந்தியாவில் எத்தனால் உற்பத்தித் திறன் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ‘கேர்-எட்ஜ் ரேட்டிங்ஸ்’ அறிக்கையின்படி, எத்தனால் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2,000 கோடி லிட்டரைத் தாண்டியுள்ளது.
எத்தனால் சமையல் அடுப்புகள்
எத்தனாலில் இயங்கும் சமையல் அடுப்புகள் ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
பெட்ரோல் பங்குகளில் திரவ எத்தனால் விற்பனை
பெட்ரோல் பங்குகளில் எத்தனால் விநியோக மையங்களை அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படலாம். நுகர்வோர் இந்த ஏடிஎம்கள் மூலம் சிறிய கேன்களில் எத்தனாலை வாங்கிச் சென்று சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது கெரோசினை போல எத்தனாலை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
இந்தியாவுக்கு கூடுதல் லாபம்
எல்பிஜிக்கு மாற்றாக உள்நாட்டு எத்தனாலைப் பயன்படுத்துவது நாட்டின் ஆற்றல் பாதுகாப்புக்கு மிகவும் நல்லது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மாற்று சமையல் எரிபொருட்களுக்கு மாறுவதால் சுமார் ரூ.2 லட்சம் கோடியை சேமிக்க முடியும்.
எத்தனால் ஏற்றுமதி
எத்தனால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, அதை ஏற்றுமதி செய்தும் இந்தியா வருவாய் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனால் ஸ்டவ்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், தூய்மையான எரிவாயு பயன்பாடு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசும் கணிசமாக குறையும்.
=====================