Central Government has listed seven bills to be introduced during the monsoon session of Parliament AI generated
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர் : 7 மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு : மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய அரசு முனைப்பு...!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 7 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டு இருக்கிறது.

Kannan

மழைக்கால கூட்டத்தொடர்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை (20ம் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

7 மசோதாக்கள் தாக்கல்

இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற மசோதாக்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா

சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை பரிசீலித்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளை வெளிப்படையாக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

அப்போது கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.

வந்தே மாதரம் பாடல்

தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது தடை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிறப்பு, இறப்பு தாமதமாக பதிவு செய்வதை தடுக்க பிறப்பு இறப்பு பதிவு திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா ஆகியவையும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

ஏற்கனவே, நிலுவையில் இருக்கும் தொகுதி மறுவரையை உள்ளடக்கிய மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர், முதல்வர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் கைதாகி 30 நாள் சிறையில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவதால், மழைக்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் வியூகம்

நீட் உள்ளிட்ட தேர்வுகள் குளறுபடி, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

=============