இந்தியாவில் மளிகைக் கடைகள்
140 கோடி மக்களை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், வணிகம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை சப்ளை செய்ய, நாடு முழுவதும் 1.4 கோடி மளிகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் மயமாகும் மளிகைக் கடைகள்
இவற்றை தவிர்த்து உணவகங்கள், மருந்தகங்கள், சிறிய கடைகள் லட்சக் கணக்கில் உள்ளன. 1.4 கோடி மளிகைக் கடைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்தியா ஒரு பெரிய 'டிஜிதுக்கான்' திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
லட்சக்கணக்கான கடைகளை இணைய தளத்திற்கு கொண்டு வந்து, அவற்றை முறையான டிஜிட்டல் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பது என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வர்த்தக ஆலோசனை மாநாடு
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்புடன் (ONDC) இணைந்து, பாரத் காமர்ஸ் சிந்தன் ஷிவிர் தலைமையில் இதற்காக மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறது.
டிஜிதுக்கான் திட்டம்
டிஜிதுக்கான் என்பது, மளிகைக் கடைகளுக்கு ஆர்டர் செய்தல், சரக்கு இருப்பு நிலவரத்தை கண்காணித்தல், திட்டங்களை மேற்பார்வையிடல் மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கான டிஜிட்டல் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
விநியோகஸ்தர் - விற்பனையாளர் பரிவர்த்தனை
இதன் மூலம், விநியோகஸ்தர்கள் மற்றும் பிராண்டுகளுடன் திறமையாக பரிவர்த்தனை செய்ய முடியும். பெரும்பாலான மளிகைக் கடைகள் தனித்தனியாக ஆர்டர் செய்வதால், அதிக செலவு, மோசமான செயலாக்கம் நிகழ்கிறது.
டிஜிதுக்கான் மூலம் நேரடிக் கொள்முதல், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வசூல் மற்றும் கடை அளவிலான தரவு பரிமாற்றங்களைச் செயல்படுத்துவதால், குறைகள் நீங்கும்.
பொதுமக்களுக்கு சிறப்பான விநியோகம், சப்ளையர்களுக்கான செலவுகள் கணிசமாக குறையும்.
நவீனமாகும் பொது வர்த்தகம்
இந்தியாவின் பொது வர்த்தகச் சூழலமைப்பு, 1.4 கோடிக்கும் அதிகமான மளிகைக் கடைகளைக் கொண்டுள்ளதுடன், அன்றாட நுகர்வோர் பொருட்கள் (FMCG) விற்பனையில் சுமார் 75-80 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
தனித்தனியான ஆர்டர் முறைகள், வரையறுக்கப்பட்ட இருப்பு நிலவரத்தை கண்காணித்தல் மற்றும் பெரும்பாலும் கையால் செய்யப்படும் விற்பனை செயல்முறைகளையே பெரிதும் சார்ந்துள்ளது.
டிஜிதுக்கான் கிடைக்கும் நன்மைகள்
* டிஜிதுக்கான், நேரடிக் கொள்முதலைச் சாத்தியமாக்கி, விளம்பரத் திட்டங்கள் குறித்த தெளிவான பார்வையை வழங்கும்.
* நிரப்பு விகிதங்களை உயர்த்துவதன் மூலமும், மளிகைக் கடைகளின் லாப வரம்பு அதிகமாகும்.
* மூலதன நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு தளமாக அமையும்.
* விநியோகஸ்தர்களுக்கு, இந்தத் தளம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆர்டர்கள் மற்றும் வசூல்கள் மூலம் பணிச்சுமையை குறைக்கும்.
* சந்தை வரம்பை விரிவுபடும், சில்லறை விற்பனையாளர்களின் வியாபாரம் பரவலாகும்.
* பிராண்டுகள், மக்களின் தேவைகளை அறிந்து, சிறப்பான சேவை வழங்க முடியும்.
ஹைதராபாத்தில் டிஜிதுக்கான்
டிஜிதுக்கான் ஹைதராபாத்தில் தனது பணியை தொடங்கி இருக்கிறது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களும் 35-க்கும் மேற்பட்ட பிராண்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அடுத்து ஜெய்ப்பூர் படிப்படியாக மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லிஎன டிஜிதுக்கான் விரிவுபடுத்தப்படுகிது.
=============