வீரதீர செயல்களுக்கான விருதுகள்
Republic Day 2026: President Murmu awards Ashok Chakra to Group Captain Shubhanshu Shukla : குடியரசு தினத்தை முன்னிட்டு, 70 ஆயுதப்படை வீரர்களின் வீர தீரச் செயல்கள் மற்றும் தியாகத்தைப் பாராட்டி, அவர்களுக்கு வீரதீர விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்தப் பட்டியலில் மரணத்திற்குப் பின் வழங்கப்படும் ஆறு விருதுகளும் அடங்கும்.
இவற்றில் ஒரு அசோக் சக்ரா, மூன்று கீர்த்தி சக்ராக்கள், 13 சௌர்ய சக்ராக்கள் (ஒன்று மரணத்திற்குப் பின்), ஒரு பார் டு சேனா பதக்கம் (வீரதீரச் செயல்), 44 சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) (ஐந்து மரணத்திற்குப் பின்), ஆறு நவ் சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) மற்றும் இரண்டு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) ஆகியவை அடங்கும்.
'அசோக் சக்ரா' - சுபான்ஷூ சுக்லா
அதன்படி விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அவருக்கு 'அசோக் சக்ரா' விருதினை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
விண்வெளியில் சுபான்ஷு சுக்லா
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 'ஆக்சியம் -4' திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோவின் ஆதரவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்றார்.
விண்வெளியில் 18 நாட்கள்
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த அவர் 18 நாட்கள் தங்கி, விண்வெளியின் நுண் ஈர்ப்பு விசை சூழலில் இஸ்ரோவால் அளிக்கப்பட்ட ஏழு முக்கியமான ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
தனது விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஜூலை 15 அன்று, 'டிராகன் கிரேஸ்' விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார்.
மத்திய அரசு கௌரவம்
விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நாட்டிற்கு தேடித் தந்தார் சுபான்ஷூ சுக்லா. அவரை கௌரவிக்கும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும் அசோக் சக்ரா விருது வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
===============