மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி விவாதம் நடத்தத் தயார் என்று சவால் விடுத்திருந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமரை வெளியே வந்து விவாதிக்க அழைப்பதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி விடுத்த சவால் :
தேர்தலில் முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக வாக்குத் திருட்டு (Vote Chori), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி தன்னுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் நிதி அமைப்பு, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றமே விவாதத்துக்கான இடம் :
இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், பிரதமருடன் விவாதிக்க வேறு இடத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும், நாடாளுமன்றமே அதற்கான சரியான இடம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், SIR மற்றும் EVM தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் விவாதத்துக்கு அழைப்பு விடுப்பதில் காட்டும் ஆர்வத்தை நாடாளுமன்றத்திலும் காட்டலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதாகக் குற்றச்சாட்டு :
நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பினர் பதிலளிக்கும்போது ராகுல் காந்தியும் அவரது கட்சியினரும் பலமுறை வெளிநடப்பு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
அரசாங்கத்திடம் பதில்களைக் கேட்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதேபோல அந்தப் பதில்களைக் கேட்பதற்கான பொறுப்பும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.
'கேள்வி கேட்டால் பதிலையும் கேட்க வேண்டும்!'
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பது குறித்துப் பேசும் ராகுல் காந்தி, அவற்றை உருவாக்கிய அமைப்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்காமல், அவற்றுக்கான ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
=====================