Chief Election Commissioner Gyanesh Kumar Bribery Case Kerala Approval source: google
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான ரூ.2 கோடி லஞ்ச வழக்கு : விசாரணையைத் தொடங்க கேரள அரசு அனுமதி!

2006-ஆம் ஆண்டு கேரள சாலை விரிவாக்கத் திட்டத்தில் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்ட புகாரில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய கேரள அரசு அனுமதி.

Kavitha prasanna

Chief Election Commissioner Gyanesh Kumar Bribery Case Kerala Approval

20 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்ய அனுமதி

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமார் கேரள மாநிலத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை செயலாளராக பணியாற்றியபோது, சாலை விரிவாக்கப் பணியில் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அவர் மீது வழக்குத் தொடர மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

ரூ. 2 கோடி லஞ்சக் குற்றச்சாட்டின் பின்னணி

2006-ஆம் ஆண்டில் ஞானேஷ் குமார் பதவியில் இருந்த காலத்தில், திருவனந்தபுரம் - கோட்டயம் இடையே எம்.சி. சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தன. இந்த திட்டத்தை கே.எஸ்.டி.பி. (KSTP) என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது.

சாலை ஒப்பந்தத்திற்கான ரசீது வழங்குவதற்காக ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக சாலை ஒப்பந்ததாரர் சாஜன் புகார் அளித்திருந்தார்.

இதே காலகட்டத்தில் மாநில போக்குவரத்துத் திட்டத்தில் பணியாற்றிய மலேசியாவை சேர்ந்த பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை குறிப்பில் ஞானேஷ்குமாரின் பெயர்

மலேசிய நிறுவனம் சார்ந்த இந்தச் சாலைப் புனரமைப்புத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க லஞ்சம் கோரியதாகவும், பணம் செலுத்துவதில் தாமதம் செய்ததாகவும் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளர் ஞானேஷ் குமாரின் பெயர் அவரது தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஞானேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுப் பின்னர் மத்திய அரசுப் பணியிலும் சேர்ந்தார். இதனால் இந்த வழக்கின் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானேஷ் குமார் மீதான புகாரை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது தொடர்பாக கேரள லஞ்ச ஒழிப்புத் தனிப்பிரிவு மாநில அரசிடம் அனுமதி கோரியது.

இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதுடன், 2006-ல் நடத்தப்பட்ட விசாரணையின் அனைத்து கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் ரீதியான நெருக்கடி மற்றும் போராட்டங்கள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், 2006-ல் கிடப்பில் போடப்பட்ட பழைய வழக்கின் விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதும், புதிய வழக்குப்பதிவு நடவடிக்கைகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

========