Chief Minister Vijay emphasized cooperation between states is essential regarding Cauvery, Mullaperiyar AI generated
இந்தியா

காவிரி, முல்லை பெரியாறு “ பிரச்சினைகளை பேசிய முதல்வர் விஜய் : நீட் விலக்கு, எம்பிக்கள் எண்ணிக்கை பற்றி வலியுறுத்தல்..!

காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில், மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மிக அவசியம் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

Kannan

தென் மாநில முதல்வர்கள் மாநாடு

31 வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாதாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய்...

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேளரா முதலமைச்சர் சதீஷன், ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய் பேச்சு

மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ”தென் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.

தென்மாநிலங்களின் முக்கியத்துவம்

இதனால், நமது பகுதி தேசிய பொருளாதாரத்தின் முக்கிய இயக்க சக்திகளில் ஒன்றாக உள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி, சேவை மற்றும் புதுமை ஆகிய துறைகளில் தென் மாநிலங்கள் நாட்டில் முன்னணியில் உள்ளன.

கூட்டாக செயல்பட்டால், அபரிதமான வளர்ச்சி

நமக்கிடையே உள்ள பொதுவான சவால்களை எதிர்கொண்டு, நமது கூட்டு பலங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தென்னிந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மேலும் அதிக வளர்ச்சி மற்றும் வளமான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இளம் தலைமுறையே நமது நாட்டின் எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். எனவே, போதை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் மனநிலையை மாற்றக்கூடிய மருந்துகள் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுவதும்...

இளைஞர்களுக்கு அவை சட்டவிரோதமான ஆன்லைன் விற்பனை, அங்கீகரிக்கப்படாத விநியோகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் மூலம் கிடைப்பதும் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் ஆன்லைன் விற்பனையை ஒழுங்குபடுத்தும் சட்டக் கட்டமைப்பை மத்திய அரசு மேலும் வலுப்படுத்த வேண்டும்.

பெங்களூரு–ஓசூர் மெட்ரோ

கர்நாடகாவின் பொம்மசந்திராவிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோவை நீட்டிக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்புகளில் ஒன்றாக அமையும்.

இதன் மூலம் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி தொழில்துறை வழித்தடமும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் தொழில் மையமும் இணைக்கப்படும்.

இரு மாநிலங்களின் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரங்கள் ஒருங்கிணைக்கப்படும். மாநில எல்லைகளைத் தாண்டிய கூட்டுறவு உள்கட்டமைப்பு எதை சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

மத்திய அரசு மற்றும் இரு மாநில அரசுகளின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டும். தென்னிந்தியாவில் இதுபோன்ற பல இணைப்புகளுக்கு இதுவே முதல்படியாக அமையட்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளங்கள்

தென் மாநிலங்களின் ஒத்துழைப்பு குறித்த எந்தவொரு விவாதமும் நமக்கிடையே பகிரப்படும் நதிகளைப் பற்றி பேசாமல் முழுமையடையாது. தண்ணீர் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகும்.

நீர் பங்கீட்டில் ஒத்துழைப்பு அவசியம்

மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிப்பதில் ஒத்துழைப்பும் சட்டத்தின் மீதான உறுதியான மரியாதையும் அவசியம். இரண்டு முக்கியக் கொள்கைகள் நம்மை வழிநடத்த வேண்டும்.

தீர்ப்புகளை மதித்து நடக்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், முறையாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் உத்தரவுகள் மற்றும் நதி மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட சட்டரீதியான அமைப்புகள் ஆகியவை அவற்றின் முழு நோக்கத்துடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

காவிரி விவகாரம் வலியுறுத்தல்

காவிரி தொடர்பாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம்.

முல்லைப் பெரியாறு விவகாரம்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வழிநடத்தப்பட வேண்டும்.

மற்றொரு மாநிலத்தின் உரிமையான நீர்ப்பங்கை பாதிக்கக்கூடிய எந்தவொரு மேல்நிலை மாநில நடவடிக்கையும் சட்ட மற்றும் நிறுவன அமைப்பிற்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள் மற்றும் சட்டத்திற்கு மரியாதை ஆகியவற்றுடன் அணுகினால், ஒவ்வொரு நதிநீர் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதோடு, கூட்டுறவுக் கூட்டாட்சியின் உணர்வையும் வலுப்படுத்த முடியும்.

NEET தேர்வு விலக்கு

தமிழ்நாடு அரசு தனது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், மருத்துவக் கல்வியில் சமமான வாய்ப்பை உறுதி செய்வதிலும் உறுதியாக உள்ளது.

NEET தேர்வு, கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதகத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது பள்ளிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்டகால உள்ளடக்கிய கல்வி முறையை பாதிக்கிறது.

மாநில அரசே நிரப்ப உரிமை

எனவே, தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து MBBS, BDS மற்றும் AYUSH இடங்களையும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நிரூபிக்கப்பட்ட மற்றும் சமமான சேர்க்கை முறைக்கு ஏற்ப இது அமைய வேண்டும்.

எம்பிக்கள் எண்ணிக்கை - வலியுறுத்தல்

தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்தல்

1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கான இடைநிறுத்த காலம் முடிவடைய உள்ளது.

மேலும், 2026 தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலிக்கப்படும் நிலையில் உள்ளது. மக்கள்தொகையை முதன்மையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்களின் நாடாளுமன்றக் குரல் குறையக்கூடும் என்ற உண்மையான மற்றும் பொதுவான கவலை தென் மாநிலங்களுக்கு உள்ளது.

தென் மாநிலங்கள் மக்கள் தொகை நிலைப்படுத்தல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முன்னணியில் உள்ளன.

இவை தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் விளைவுகளாகும். இந்த சாதனைகள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் குறைப்பை ஏற்படுத்தக்கூடாது.

தேசிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மாநிலங்களை பொதுக் கொள்கைகள் தண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

எனவே, மக்கள் தொகை நிலைப்படுத்தலில் ஒரு மாநிலம் வெற்றி பெற்றதற்காக, நாடாளுமன்றத்தில் அந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதம் குறைக்கப்படாது என்பதற்கான தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு மற்றும் நமது சகோதர மாநிலங்களுடன் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக” முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.