தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம்
நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற போராட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்
இதே ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, காந்தியவாதி சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.
21 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தும் பதில் கூறாத மத்திய அரசு, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கட்டாயமாக வெளியேற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர்
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்து இருந்தது.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி
அதன்படி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல நூற்றுக்கணக்கானோர் முயன்றனர்.
பாதுகாப்பு படையினர் குவிப்பு
தலைநகரின் பல்வேறு பகுதிகளில் திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்கள் பேரணியை முன்னெடுத்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இணைய சேவை துண்டிப்பு
ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. கூட்டம் பெருமளவில் திரளுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மெட்ரோ நிலையங்கள் மூடல்
மெட்ரோ நிலையங்களிலும் போராட்டக்காரர்கள் குவிந்ததால்,
ஐந்து மெட்ரோ நிலையங்களை மூடியது டெல்லி மெட்ரோ நிர்வாகம்.
போராட்டங்கள் நடத்த தடை
டெல்லி முழுவதும் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு ( ஊரடங்கு உத்தரவு) அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி ஜந்தர் மந்தரைத் தவிர மற்ற இடங்களில் போராட்டம், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது தடியடி
தடையை மீறி செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தும் காணொளியைப் பகிர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பிரதமர் மோடி, உங்கள் காவல்துறையினரை விலகிச் செல்லுமாறு கூறுங்கள். நீங்கள் மறந்துவிட்டிருந்தால் சொல்கிறோம்.
நாம் ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டத்தை நீங்கள் நசுக்க முயற்சிப்பதை உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது." என தெரிவித்தது.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி
ஒரு சில இடங்களில் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும், புற்றீசல் போல திரண்டு வந்த போராட்டக்காரர்கள் சாரைசாரையாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.
நாடாளுமன்ற வளாகம் மூடல்
நாடாளுமன்ற வளாகத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் மூடப்பட்டது. . வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டக்காரர்கள் நுழைவு வாயில் பகுதிக்கு அருகே வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கதவுகள் மூடப்பட்டன. போராட்டக்காரர்கல் மீது கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
ஸ்தம்பித்த டெல்லி
கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதால், ஆயிரக் கணக்கான வாகனங்கள் அணிவகுப்பு நிற்கின்றன. டெல்லி நகரமே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
====================