டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த CJP (Cockroach Janata Party) தலைவர்கள் அபிஜித் டிப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 10ஆம் தேதி மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்தபோது விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள், பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
அக்டோபர் 11ஆம் தேதி டெல்லி கான்ட் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
டெல்லி காவல்துறையின் தகவலின்படி, மூன்று தலைவர்களும் தலா ₹50,000 பிணைத் தொகை செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்த ஓராண்டுக்கு அமைதியைப் பேணுவதுடன், நல்ல நடத்தையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 126 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஏன்?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் CJP தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளன.
தலைவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளைக் கைவிடப் போவதில்லை என்று CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், டெல்லியில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் அமைதியான போராட்டங்களுக்கான உரிமை ஆகியவை இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன
===================