CJP staging continuous protest in Delhi for 2nd day, demanding resignation of Minister Dharmendra Pradhan google
இந்தியா

”கரப்பான் பூச்சி போல திரும்பி வருவோம்” : CJP போராட்டம் நீடிப்பு, தடியடிக்கு கண்டனம் : பதற்றத்தின் உச்சத்தில் டெல்லி..!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பூன் பூச்சி கட்சியினர் 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Kannan

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகளால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கரப்பூன் பூச்சி ஜனதா கட்சி

தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகம் மூலமாக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

கரப்பான் பூச்சி கட்சி சார்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கினார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் போது அரசின் கவனத்தை ஈர்க்க, ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது.

மருத்துவமனையில் சோனம் வாங்சுக்...

21 நாட்கள் உண்ணாவிரதத்தில் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி

திட்டமிட்டபடி, நேற்று நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் ஜனதா கட்சியினர் பேரணியை முன்னெடுத்தனர். இதற்காக, பெரிய அளவில் இளைஞர்கள் திரண்டனர்.

மாணவர்கள் பங்கேற்பு

பல்வேறு மாணவர் அமைப்பினரைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து பஸ், ரயில்களில் வந்த இளைஞர்கள் முதுகில் பையுடன் நேரடியாக போராட்ட களத்திற்கு விரைந்தனர்.

சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், முதியவர்களும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் திரண்டனர்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

பேரணிக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்த போலீசார் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். சிஐஎஸ்எப் உள்ளிட்ட துணை ராணுவப் படையினரும் நாடாளுமன்றத்தை சுற்றிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு, கும்பல் கூட 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அலைஅலையாக முன்னேறிய மாணவர்கள்

அனைத்தையும் மீறி மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க மிகுந்த தைரியத்துடன் தடைகளை தாண்டி அலைஅலையாக முன்னேறினர்.

ஸ்தம்பித்தது டெல்லி

முக்கிய சாலைகள் முடக்கப்பட்டிருந்ததால் சிறு தெருக்கள், குறுக்கு வழிகள் மூலமாக குழு குழுவாக பிரிந்து ஒன்று கூடினர். இதை எதிர்பார்க்காத போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

நாடாளுமன்றத்தை நெருங்கிய இளைஞர்கள்

பல இடங்களில் பேரிகார்டுகளை மீறி இளைஞர்கள் முன்னேறி நாடாளுமன்றத்தையும் நெருங்கினர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் வடக்கு புறம் இருக்கும் கேட் பகுதியை நோக்கி சென்றனர்.

துப்பாச்சிக்சூடு, தடியடி

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்து விட்டால் என்ன ஆவது என்று சுதாரித்துக் கொண்ட போலீசார் பாதுகாப்பு கருதி முதலாவதாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஆனால் அதன் பின்னரும் கலைந்து செல்லவில்லை என்பதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி தந்தது.

பெண்கள் மீதும் தடியடி

போராட்டக்காரர்களை போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இளைஞர்கள் பலருக்கு மண்டை உடைந்தது. பெண்கள், மாணவிகளும் விடாமல் அடித்து விரட்டப்பட்டனர்.

நாடாளுமன்ற வாயில் மூடல்

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வடக்கு புறம் இருக்கும் கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் வழி ஆகியவை பாதுகாப்பின் அடிப்படையில் இழுத்து மூடப்பட்டது.

இணைய சேவையும் துண்டிப்பு

இளைஞர்கள் குவிவதை தடுக்க நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

போராட்டக்காரர்களை ஒருவழியாக மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கிடையே இரவிலும் மீண்டும் போராட்டம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர்களின் இப்பேரணி இதுவரையிலும் டெல்லியில் நடந்த போராட்டங்களை விட மிகத்தீவிரமானதாக இருந்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விட தீவிரமாக டெல்லியின் அனைத்து பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரண்டு வந்தனர்.

இளைஞர்களின் இந்த போராட்டம் ஒன்றிய அரசுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பதற்றம் நிலவியது.

அபிஜித் கைது?

கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவை போலீசார் கைது செய்ததாக தகவல் பரவியது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என அரசு விளக்கம் அளித்தது.

போராட்டக் களத்தில் மாணவர்கள்

நாடாளுமன்றம் நோக்கிய போராட்டத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி பல பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் வீட்டில் பெற்றோரிடம் பொய் சொல்விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர்.

பீகார், மகாராஷ்டிரா, உபி, அரியானா உள்ளிட்ட பல அண்டை மாநிலங்களில் இருந்தும் இளம்பெண்கள் தனியாக இரவு நேர பஸ் பயணம் செய்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர்.

2வது நாளாக போராட்டம்

நாடாளுமன்ற முற்றுகை தடுக்கப்பட்டதால், மீண்டும் ஜந்தர் மந்தருக்கு திரும்பி போராட்டக்காரர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 2வது நாளாக இன்றும் போராட்டமானது நீடிக்கிறது.

கரப்பான் பூச்சியாய் வருவோம்

காவல்துறையின் தடியடிக்கு கண்டனம் தெரிவித்த இளைஞர்கள், கரப்பான் பூச்சியை போல மீண்டு வருவோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

====================