CM Vijay urged Tamil Nadu be exempted from NEET exam, second AIIMS hospital established in Coimbatore google
இந்தியா

NITI Aayog: ‘NEET’ விலக்கு, கோவையில் ’AIIMS’ :1.5 டிரில்லியன் டாலர் வளர்ச்சி, தேசிய இலக்கியமாக ’திருக்குறள்’ : CM விஜய்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், கோவையில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று, முதல்வர் விஜய் வலியுறுத்தி இருக்கிறார்.

Kannan

நிதி ஆயோக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.

28 மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.

வளர்ச்சி பாதையில் இந்தியா

‘வளர்ந்த இந்தியா - 2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு’ என்ற கருப்பொருளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இக்கட்டான சூழலிலும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா தன்னம்பிக்கையுடன் வேகமாக முன்னேறிச் செல்கிறது.

2047க்குள் வளர்ந்த இந்தியா

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும்.

தரமான கல்வி அவசியம்

இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்திய நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக பொருட்களை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும்.

வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு

இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்களித்து வருகின்றனர். அவர்களது கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும், என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

நீட் தேர்வு விலக்கு - முதல்வர் வலியுறுத்தல்

இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தரவேண்டும்.

மாநிலங்களின் அதிகாரங்கள்

அதிகாரம் அளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவு கூட்டாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாகமட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும்.

1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி

2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் இளைஞர் திறன், வேலை வாய்ப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.

கோவையில் 2வது எய்ம்ஸ்

கோவையில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும்.

தேசிய இலக்கியமாக ’திருக்குறள்’

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக விளங்கும் திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும்.

நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்

தமிழகம் ஆக்கப்பூர்வமாக செயல்படும் சிறப்பான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும், என்று முதல்வர் விஜய் உரையாற்றினார்.

===============