College student cleans up a polluted river all by himself: Heartwarming incident in Madhya Pradesh! source:google,ai generated
இந்தியா

மாசடைந்த நதியைத் தனி ஒருவராக சுத்தம் செய்த கல்லூரி மாணவர் : மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியை சொந்த செலவில் தனி ஒருவனாகச் சுத்தம் செய்த பிட்டு துபாஹி என்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு.

Kavitha prasanna

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனது பகுதியில் கடுமையாக மாசடைந்திருந்த நதியைத் தனி ஒரு ஆளாகச் சுத்தம் செய்து மீட்டெடுத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

அஜ்னார் நதியின் அவலநிலையும் மாணவனின் முயற்சியும்

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் பாயும் அஜ்னார் நதி, பியோரா நகரின் முக்கிய வாழ்வாதார ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது.

தொழிற்சாலைக் கழிவுகள், நகர்ப்புறக் கழிவுகள், பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டதால் இதை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

மாணவனின் துணிச்சல் நடவடிக்கை

நதியின் அவலநிலையைக் கண்ட பியோரா பகுதியைச் சேர்ந்த பிட்டு துபாஹி என்ற 20 வயது மாணவர், நதியை சுத்தம் செய்ய முடிவெடுத்துப் பணிகளில் இறங்கினார்.

சொந்த செலவில் பணி

சுத்தம் செய்யும் பணிக்குத் தேவையான உபகரணங்களைத் தனது சொந்தப் பணத்திலேயே வாங்கி, கையுறை அணிந்து நதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினார். தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு நதி தூய்மையாகக் காட்சியளிக்கிறது.

சமூக வலைதளங்களில் விவாதம் மற்றும் பாராட்டுகள்

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது இடங்களையும் நதிகளையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு என்ற விவாதம் எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளிடம் போதிய வளங்களும் பொறுப்புகளும் இருக்கும் நிலையில், ஒரு தனிநபர் இந்த வேலையை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், அம்மாணவரின் சேவையைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

விமர்சனங்களும் மாணவனின் விளக்கமும்

இதனிடையே ஒரு சிலர், மாணவர் பிட்டு துபாஹி உண்மையிலேயே நதியைச் சுத்தம் செய்யாமல், வீடியோவிற்காக மட்டுமே அவ்வாறு செய்வதாகக் குற்றம்சாட்டினர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நதியை சுத்தம் செய்ய தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், அதற்கு எத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது என்பது குறித்தும் அம்மாணவர் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

======