contempt petition filed in Supreme Court, failure to implement order deepam issue at Tirupparankundram source:thamizhalai,ai generated
இந்தியா

”உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு” : திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் : நாளை விசாரிக்க ஒப்புதல்..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தாதது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

Kannan

திருப்பரங்குன்றம் - உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும், அது தொடர்பாக 3 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம்

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை. பிள்ளையார் கோவிலில் வழக்கமாக ஏற்றப்படும் தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எதிர் மனுதாரர்களான ராம ரவிக்குமார் மற்றும் கே.கே.ரமேஷ் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோரிக்கை

தீபம் ஏற்றுவதற்கு எதிராக அமைச்சர்கள் யாரேனும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்களா? நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க அரசியல் ரீதியாக ஏதேனும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறியது ஏன்?

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க யார் முடிவெடுத்தது? அந்த முடிவு யாரிடமிருந்து வந்தது? என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும், அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள்..

உளவுத்துறை அறிக்கைகள், அரசு கோப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை விசாரணை)

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதி அரவிந்த்குமார் அமர்வில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். தீபம் ஏற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரிய இடையீட்டு மனுவும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

=========================