சுதந்திர தின விழா :
ஆங்கிலேயரிடம் இருந்து நாடு விடுதலை பெற்ற ஆகஸ்டு 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்டு 15ம் தேதியான நாளை, 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் களைகட்டி இருக்கின்றன.
கருப்பொருள் ”புதிய பாரதம்” :
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா மாறும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள் புதிய பாரதம் என்பதாகும். வளமான, பாதுகாப்பான மற்றும் துணிச்சலான புதிய இந்தியாவின் தொடர் எழுச்சியை இது நினைவு கூரும்.
செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் மோடி :
டெல்லியில் செங்கோட்டையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுவார்.
செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருகை தந்ததும், அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக் கொண்டாட்டம் :
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியும் சேர்த்து கொண்டாடப்படும். வியூ கட்டரில் ஆபரேஷன் சிந்தூரின் இலச்சினை இடம்பெற்றிருக்கும். மலர் அலங்காரமும் இதை குறிக்கும் வகையில் இருக்கும்.
சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு :
செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களைக் காண பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடையில் இந்த விழாவைக் காண அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி :
மூவண்ண கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுவார். மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிடும் அவர், மக்களுக்கான புதிய திட்டங்களையும் அறிவிப்பார். சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எல்லைகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
==========