ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்கள் அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, குல்காம் பகுதியில் CRPF வீரர்கள் மீதும், கிஷ்த்வார் பகுதியில் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாதுகாப்பு படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த நவம்பர் 11-ம் தேதி, காஷ்மீரின் குல்காம் மாவட்டம் மிர் பஜார் அருகே உள்ள அக்ரான் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் மூன்று CRPF வீரர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறியும் பணியில் ராணுவம், CRPF மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், கிஷ்த்வார் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் (SPO) காணாமல் போயினர்.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், நவம்பர் 12-ம் தேதி அவர்கள் இருவரும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
ரஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் என அடையாளம் காணப்பட்ட இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.
மேலும், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளும் சம்பவ இடத்திலிருந்து மாயமாகியிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாகவும் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், CRPF வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், நவம்பர் 16-ம் தேதி குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இதில் உமர் தார் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
====================