இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி
Excise Duty On Petrol Cut To Rs 3, Diesel To Zero : இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக மூடியது.
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதை முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்று எரிபொருளை நிரப்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று ஆலோசனை
எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கலால் வரி குறைப்பு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3 ஆகவும், 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிபொருள் விலை ஏறாது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பின் பலன் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்வதால் பெட்ரோல், டீசல் விலை குறையவோ, உயரவோ செய்யாது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=================