தீவிர புயலாக ’அக்வான்’
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ‘அக்வான்’ புயலாக மாறியது. இது மிகத் தீவிர புயலாக இன்று மாலை வலுப்பெறுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நீடிக்கிறது
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கே நகர்ந்து நேற்று ‘அக்வான்’ (Akvan) புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை தீவிர புயலாக நிலவக்கூடும்.
20ம் தேதி கரையை கடக்கிறது
இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.20-ம் தேதி நண்பகல் மிகத் தீவிரப் புயலாக நெல்லூர் - துனி இடையே ஆந்திரகடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120-130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கிமீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை
18, 19-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (40-50 கிமீ வேகம்) மிக கனமழையும் காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். வட கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
====