Arnab Cyclone Update Machilipatnam Kakinada Landfall source:x.com
இந்தியா

கண் திறந்தது 'அர்னாப்' புயல்: நாளை கரையைக் கடக்கிறதா? மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று!

அர்னாப் புயல் அக்டோபர் 28-ல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது; மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை.

Kavitha prasanna

Arnab Cyclone Update Machilipatnam Kakinada Landfall

18 மணி நேரத்தில் தீவிரமடைந்த 'அர்னாப்' புயல்

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் (Cyclone Arnab) மிகக் குறுகிய காலத்தில் வேகமாக வலுப்பெற்று, தற்போது மிகக் கடுமையான புயலாக தீவிரமடைந்துள்ளது.

அக்டோபர் 26-ஆம் தேதி காலை 5:30 மணிக்கு சாதாரண புயலாக உருவானது.

அதே நாள் மாலை 5:30 மணிக்குத் தீவிரப் புயலாகவும், இரவு 11:30 மணிக்கு மிகக் கடுமையான புயலாகவும் உருவெடுத்தது. வெறும் 18 மணி நேரத்தில் இப்புயல் மிகக் கடுமையான நிலையை எட்டியுள்ளது.

புயலின் கண் திறந்தது

புயல் உருவான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதன் மையம் அல்லது கண் (Eye of the Cyclone) தெளிவாக உருவாகியுள்ளது. தற்போது இப்புயல் மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 280 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அதி தீவிரப் புயலாக மாற வாய்ப்பு

அக்டோபர் 28-ஆம் தேதி முற்பகலில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே, விசாகப்பட்டினம் மற்றும் பாபட்லா இடையேயான கடலோரப் பகுதியில் இப்புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரையைக் கடக்க இன்னும் நேரமிருப்பதால், இது மேலும் வலுப்பெற்று 'அதி தீவிரப் புயலாக' மாறக்கூடும்.

காற்றின் வேகம் மற்றும் மழை

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். மேலும், கரையோரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளான விசாகப்பட்டினம், பாபட்லா மற்றும் காக்கிநாடா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

அர்னாப் புயல் கிழக்கு திசைக் காற்றைத் தன்னுடன் இழுத்துச் செல்வதால், தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து இன்று நண்பகல் முதல் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது.

இருப்பினும், நேற்று கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்படப் பல்வேறு உள்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

==========