சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில்
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி, சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் புயலானது மையம் கொண்டிருந்தது. இது ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆந்திராவில் கரையை கடக்கும் மோந்தா
நாளை பிற்பகல் அதிதீவிர புயலாக மாறும் மோந்தா, ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே மாலையில் கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். பலத்த மழையும் கொட்டித் தீர்க்கும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழையும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
ஐந்து மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கை
மோந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மோந்தா புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. கரையை நெருங்க நெருங்க அதன் வேகம் மேலும் அதிகரிக்கும். மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் போது காற்றின் வேகமானது மிகத் தீவிரமாக இருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. .
2ம் எண் எச்சரிக்கை கூண்டு
மோந்தா புயல் கரையை கடக்க இருப்பதால், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
கூடுதல் மழைப்பொழிவு
அக்டோபர் முதல் இன்றுவரை சென்னை உட்பட வட மாவட்டங்களில் 57 சதவீதம் கூடுதல் மழை பெய்து இருக்கிறது.
==============