differences of opinion emerged within Election Commission regarding SIR, Congress raised revolt against CEC  source:thamizhalai,ai generated
இந்தியா

”SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் மோதல்” : எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் : மத்திய அரசுக்கு புதிய தலைவலி...!

SIR நடவடிக்கையில் தேர்தல் ஆணையத்துக்குள் எழுந்திருக்கும் கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, தலைமை தேர்தலை ஆணையரை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது.

Kannan

எஸ்ஐஆர் பணிகள் - தொடரும் சர்ச்சை

SIR எனப்படும் Special Intensive Revision நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் லட்சக் கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

இறந்தவர்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துப்பூர்வ எதிர்ப்பு - தலைமை தேர்தல் ஆணையருக்கு சிக்கல்

ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.

ஆணையர்கள் கடும் எதிர்ப்பு

புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த எதிர்ப்பு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

விதிகளில் திருத்தம் - ஆணையர்கள் கோரிக்கை

குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6-ல் SIR தொடர்பான கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு விதிகளில் திருத்தம் தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கட்டுப்பாடு டெல்லியில் வைத்திருப்பது குறித்தும் இரு தேர்தல் ஆணையர்களும் கவலை தெரிவித்ததாகவும், இது மாநில அளவிலான அதிகாரிகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையருக்கு கண்டனம்

இந்தத் தகவல்களை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகள் எழுவதாகவும், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை மறுத்துள்ளது. ஆணையத்தின் தரப்பில், அனைத்து முடிவுகளிலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் கையெழுத்தும் இருந்ததாகவும், சந்து மற்றும் ஜோஷி சில கருத்துகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தாலும், அவற்றை முழுமையான எதிர்ப்பு எனக் கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

==============