Direct Tax officials discover restaurants that hid income worth Rs 70, 000 crore fraud Hyderabad Briyani nation wide Source : Google
இந்தியா

70 ஆயிரம் கோடி மோசடி : வருவாயை மறைத்த உணவகங்களை கண்டுபிடித்த நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள்!

Food Income Tax Fraud Case : நாடு முழுதும், 1 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் ஆறு ஆண்டுகளாக வருவாயை மறைத்து, 70,000 கோடி ரூபாய் வரை வரி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Baala Murugan

பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்ட பில்லிங் மென்பொருள்

Food Income Tax Fraud Case : தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தை பெற ஒரே மாதிரியான பில்லிங் மென்பொருளை பயன்படுத்தி வந்தன.

பல லட்சம் கோடி வருமானம் மறைப்பு

இதன் வாயிலாக, பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெற்றும், அதை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறைக்கு புகார்கள் குவிந்தன.

நேரடி வரிகள் வாரியம் ஆய்வு

இதையடுத்து, தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள பிரபல உணவகத்தில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பரில் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததும், இதற்கு பிரத்யேகமாக பயன் படுத்தப்பட்ட பில்லிங் மென்பொருளே காரணம் என்பதும் தெரியவந்தது.

சரக்கு சேவை வரி மூலம் அம்பலம்

அடுத்தகட்டமாக, இந்த செயலியை பயன்படுத்திய தமிழகம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் செயல்படும் உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

உணவகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முதற்கட்டமாக, 1.77 லட்சம் உணவகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில், 2.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் சோதனை செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட செயலியில் 60 'டெராபைட்' அளவிலான தரவுகள் இருந்ததை அடுத்து, அவை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

70,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி

இதில், கடந்த 2019 - 20 நிதியாண்டில் இருந்து இதுவரை 70,000 கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரிகளிலும் மோசடி நடந்தது அம்பலமாகிஉள்ளது.

10 சதவிகிதத்தை உள்ளடக்கிய உணவகங்கள்

வரி ஏய்ப்பு இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்ட உணவகங்களில் கடந்த ஆறு ஆண்டுகளாக 70,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வரிமோசடி நடந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உணவுக்கான ரசீதுகள் வழங்கப்பட்ட பின், நவீன பில்லிங் மென்பொருளை பயன்படுத்தி, கணினியில் அந்த பதிவுகள் அழிக்கப்பட்டு வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

இந்த மென்பொருள் 1 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உணவு சந்தையில், இந்த உணவகங்கள் 10 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன.

வருமான வரி தாக்கலின் போது மென்பொருள் வாயிலாக பெருவாரியான வருவாய் மறைக்கப்பட்டு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் இந்த வரி ஏய்ப்பு மோசடியில் முன்னணியில் உள்ளன. அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,000 கோடி ரூபாயும், அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 1,500 கோடி ரூபாயும், மூன்றாவதாக தமிழகத்தில் 1,200 கோடி ரூபாயும் வரிஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

==============